பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இசைவாது வென்ற படலம்

125


முதலில் விறலி பாடினாள்; அது கேட்க இனிமையாகவே இருந்தது; இருக்கையில் இருந்தவர்கள் அவள் பாடிய பாட்டுக்குக் காது கொடுத்தார்கள்.

பாடினி இறைவனை நினைத்துப் பாடிய பாட்டு நெஞ்சை உருக்கியது.

மிடற்று அசைவே இல்லாமல் தலையும் ஆட்டாமல் கண் இமைக்காமல் பல் வெளிப்படாமல் புருவம் நிமிராமல் கன்னம் தடியாமல் பாடிய மிடற்றிசை கேட்டு அவையோர் வியப்பும் திகைப்பும் மகிழ்வும் அடைந்தனர். பாண்டியனும் ஒருசார் பேச நினைத்தவன் கோயில் திருச்சபையில் நிலை தடுமாறவில்லை; முன்னே இருந்து இசைப்புலவனாக வந்த சோமசுந்தரரின் பார்வை அவன் மீது பட்டது; அது அவன் நெஞ்சைக் சுட்டது; அவன் காமவல்லியிடம் கொண்டிருந்த பற்று கெட்டது: கைதட்டி ஆரவாரித்துப் பாடினியைப் பாராட்டியது வானத்தைத் தொட்டது.

யாழிசைபாடும் ஈழநாட்டுப் பெண் தோல்வியை ஏற்றுப் பாடினி ஏறி அமரத் தோள் கொடுத்தாள். பாடினி வெற்றி அடைந்தும் அவள் ஆரவாரத்தைக் காட்டவில்லை. அவளை ஊக்குவித்த காமக்கிழத்தி வாயடங்கிப் போனாள். அரசனைத் தவறான பாதையில் திருப்பியதற்கு நாணினாள்.

வெளிநாட்டில் இருந்து அழைத்து வந்த ஈழத்து இசைக்காரியை அவமானப் படுத்தாமல் அவளுக்கு வேண்டியபொருள் கொடுத்துச் சமாதானப்படுத்தினான். பாடினிக்குப் பொருளே அன்றி வரிசைகள் தந்து சிறப்புச் செய்தான்.