பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்

113


அங்குச் குழுமி இருந்த புலவர்கள் பொறாமையால் பொருமிப் புழுங்கின்ர். இது தான் அரசன் நினைத்தது என்று தெரிந்திருந்தால் அப்பொருள் பற்றி ஒரு துறைக் கோவையாக நூறுஆயிரம் பாடல்கள் பாடி இருப்போமே; இவன் ஐந்தடிப் பாட்டு ஒன்று பாடி ஆயிரம் பொன் பெறுகிறானே இது அக்கிரமம், என்று நினைத்தனர்.

பாட்டில் ஏதாவது குறையிருக்கிறதா என்று யாப்பறிந்த புலவர்கள் கோப்பு அறிந்து பார்த்தார்கள். எதுகை மோனை அடிதொடை யாப்பில் எந்தக் குறையும் இல்லை.

புலவர் நக்கீரனால் இதைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. பிராமணனைப் பார்த்து 'நில்' என்றான்; அந்தச் சொல் அவனை அச்சுறுத்தியது.

"இதில் பொருட் குற்றம் உள்ளது" என்றான். கைப் பொருளுக்கே அவன் வெடி வைப்பது பார்த்து இடிகேட்ட நாகம் போல மனம் நொடிந்து போனான். சோம சுந்தரனை வேண்டினான்.

"சுந்தரனே, பரிசு இல்லை என்றாலும் எனக்குக் கவலை இல்லை; உன் கவிதையைக் குற்றம் சொல்கிறாரே இந்த நக்கீரர். நற்றமிழ் அறிந்த நீ வந்து உன் மானத்தைக் காத்துக் கொள்" என்றான் அப்பார்ப்பன இளைஞன்.

"நக்கீரரே நீர் கண்ட பொருட் குற்றம் யாது?" என்று சிவன் அவைப் புலவராக உடை உடுத்திச் சென்று வினா எழுப்பினார்.