பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

திருவிளையாடற்புராணம்


ஊமை எப்படி ரசிகனாக இருக்க முடியும் பேச முடியாதவன் எப்படி நா அசைப்பான் என்ற ஐயங்கள் எழுந்தன, எனினும் சுந்தரருக்கு மறுப்புச் சொல்லாமல் அவனைச் சங்கத்துக்கு அழைத்துச் சென்று அவரவர் தம் கவிதைகளைப் படித்தனர்.

உப்புச் சப்பு அற்ற உதவாக்கரைக் கவிதைகளைக் கேட்கும் போது அவன் எந்த வித மெய்ப்பாடும் காட்டவில்லை; சொற் சுவை உடையதாக மட்டும் இருந்தால் கண்களில் சுவையைக் காட்டினான். பொருட் சுவை இருந்தால் மெய்ம்மயிர் சிலிர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்; அணி நயமும், இசையும் இணைந் திருந்தால் புளகித்துக் கண்களில் மகிழ்ச்சியில் நீர் அரும்ப முகமலர்ந்து அவற்றைப் பாராட்டினான்.

அவன் முன் பாடிய புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர், தலை சிறந்தவர். இம் மூவரே தலைமைக்கு உரியவர் ஆயினர்.

கவிதைப் போட்டிகளில் நடுவர்கள் அமைதியாக இருந்து தீர்ப்புக் கூறுவது போல இத்தீர்ப்பு அமைந்தது. மற்றவர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பாராட்டுதலைப் பெற்றனர். கவிதை எழுதுவதற்குப் புலமை திறனும் ஆற்றலும் அறிவுப் பெருமையும் கருவில் திருவும் அமைய வேண்டும் என்று கூறலாம்; அதைச் சுவைக்க ஒரு ஊமையே போதும்; ஐந்து வயதும் நிரம்பாத சிறுவனே முடிவு கூற முடியும் என்று இங்குச் கூறப்பட்டது.