பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

திருவிளையாடற்புராணம்

மனக்கலக்கம் அடைந்தனர். தம் தட்டு முட்டுச் சாமான்களைக் கட்டி எடுத்து வைக்கத் தம் வீடுகள் போய்ச் சேர்ந்தனர். வாசகர் எல்லாம் இறைவனின் செயல் என்று நினைத்தவராய்ச் சோமசுந்தரக் கடவுள் திருக்கோயில் சென்று இறைவனைத் தியானித்துக் கொண்டு. சுற்றுப் புறத்தை மறந்து நின்றார். 

61. மண் சுமந்த படலம்

வைகையில் வெள்ளப் பெருக்கு எடுத்தது; அதனைச் சுருக்கக் கரைகள் கட்டும் பணியை வகுத்துத் தந்தனர். வீட்டுக்கு இவ்வளவு கரை என்று அளந்து தந்தனர். அளப்பரிய கருணைக்கடலாகிய சோம சுந்தரரிடம் ஈடுபாடும் வழிபாடும் கொண்டிருந்த வந்தி என்னும் கிழவிக்கு உரிய பங்கை அளந்து விட்டனர். பிட்டு விற்று அதனால் வரும் துட்டைக்கொண்டு காலம் கடத்தும் அவள் தனியாளாக இருந்தாள். கட்டியவனும் இல்லை. அன்பு கொட்டி வளர்க்கும் காதல் மகனும் தனக்கு இல்லை. வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பப்படும் நிலையில் அவள் என்ன செய்வாள்.

தான் வழிபடும் தெய்வமாகிய சோமசுந்தரரிடம் முறையிட்டாள். "கல்விப்பெருக்கைப் போல் தடை படாமல் வரும் வெள்ளப்பெருக்கை அடக்க அவரவர் தம் கடமை செய்கின்றனர். உன்னைத் தவிர வேறு உடைமை எனக்கு இல்லாத நிலையில் எனக்கு நீ உதவ வேண்டும்" என்று முறையிட்டுக் கரையிட்டு மண் கொட்ட ஆள் கேட்டவளாய்த் தன் தொழிலில் ஈடுபட்டவளாக இருந்தாள். வழக்கம்போல் பிட்டு அங்கு விற்றுக்கொண்டிருந்தாள்.