பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

திருவிளையாடற்புராணம்

சமணரோடு வாதிட்டு வென்று வருகிறார்; அவர் புகழ் சோழ நாடு எங்கும் பேசப்படுகிறது; திருநாவுக்கரசரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்; முத்துச் சிவிகையில் அவர் பல தலங்களுக்குச் சென்று பாடல் பல பாடி வருகிறார். இது சிறப்புச் செய்தி" என்று அறிவித்தான்.

குருடனுக்குப் பார்வை கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அவ் அம்மையாருக்கு உதித்தது. அருட் செல்வராகிய ஞான சம்பந்தர் வந்தால் தம் கணவர் சமயம் மாறுவார் என்ற நம்பிக்கை பிறந்தது. ஞான சம்பந்தர் வேதாரணி யத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அந்தப் பிராமண னிடம் ஓர் ஒலை எழுதித் தந்து அவரிடம் சேர்ப்பித்து இங்கு வருமாறு செய்தி அனுப்பினார்.

குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் சேர்ந்து எழுதிய ஓலையைப் படித்துச் சிவப்பணி காத்துக் கிடக்கிறது என்பது அறிந்த ஞான சம்பந்தரும் புறப்பட முனைந்தார்.

வயதில் மூத்தவரும் சமணரின் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டவரும் ஆகிய திருநாவுக்கரசர், ஞானசம் பந்தர் அங்குச் செல்வது உயிருக்கு ஆபத்து என்றும். சமணர் கொலைக்கும் அஞ்சாதவர் என்றும், நாளும் கோளும் சரியில்லை என்றும் அறிவித்தார்.

இறைவனிடம் நம்பிக்கையும் மன உறுதியும் உடையவரை நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என்று கூறினார். இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை முழுவதும் இருந்ததால் உயிருக்கு அஞ்சுவது தேவை இல்லை என்றும் போவதே தக்கது என்றும் கூறிப் புறப்பட்டார்.