பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தடாதகைப் பிராட்டி திருவவதாரப் படலம்

29

நேரே அவன் திருமுன்பு வந்தார். அவனிடம் எங்கெங்கே எவ்வெவ்வாறு கட்டிடங்கள் எழுப்ப வேண்டும் என்பதையும், கோயில் அமைப்பையும், உட்பிரகாரம், வெளிச் சுற்று இவற்றின் அமrப்புகளையும், மதில்கள், கோபுரங்கள் அவற்றைச் சுற்றி மாளிகைகள், கடைகள், விழா வீதிகள் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கினார். பின்பு அவர் அங்கிருந்து மறைந்து விட்டார். வந்தவர் சிவபெருமானே என்பதை அறிந்த பாண்டியன் அளவு கடந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டான்.

இறைவன் பணித்தபடியே அந்நகரை நிர்மாணித்தான். வேதங்கள் பயிலும் பதும மண்டபமும், அர்த்த மண்டபமும், இசை பயிலும் நாத மண்டபமும், பறை பயிலும் நிருத்த மண்டபமும், விழாக்கோள் மணி மண்டபமும், வேள்விச் சாலைகளும், மடைப் பள்ளிகளும் அமையத் திருக்கோயிலைக் கட்டுவித்தான்.

அதனை அடுத்து வலப்பக்கம் மீனாட்சி அம்மைக்குத் திருக்கோயிலை எழுப்பி அதனையும் அவ்வாறே கட்டிமுடித்தான். இவ்விரண்டையும் சுற்றி மேகம் தவழும் வான். மதில்களையும், விண்ணை அளாவும் கோபுரங்களையும் எழுப்புவித்தான். கோயிலைச் சுற்றிக் கோபுரங்களையும், மாட மாளிகைகளையும் கட்டி வைத்தான். நாற்புறமும் அங்காடிகள் அமைக்க அழகிய தெருக்களை உண்டாக்கி வைத்தான். அவற்றையும் கடந்து அகன்ற தெருக்களையும் வீடுகளையும் கட்டித் தந்தான். திட்டமிட்ட நகராக அதனை நிர்மாணித்தான். சாந்தி செய்ய விழா எடுத்தான்.

இறைவனே அந்நகருக்கு இனிமையும் நன்மையும் அழகும் உண்டாக்கத் தன் சடை முடியில் இருந்து எழுந்த