பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

திருவிளையாடற்புராணம்

கங்கை நீரில் சந்திரனில் தோன்றிய குளிர்ந்த அமுதத்தைத் தெளித்து அதனை அந்நகர் முழுவதும் பரவச் செய்தார். மதுரம் பெருகியது. அதனால் அந்நகருக்கு மதுரை என்னும் புதுப்பெயரும் மருவியது.

அக்கோயில் புனரமைப்புப் பெற்று எட்டுத்திக்கும் அதன் பெருமை பரவ மக்கள் வந்து குழுமி வழிபட்டுப் பயன்பெற்றனர்; பாண்டியனும் அக்கோலுக்குத் தவறாமல் சென்று வழிபட்டு நற்பயன் அடைந்தான்; மலையத்துவசன் என்னும் பெயருடைய மகனைப் பெற்று ஆட்சிக்கு உரியவனாக அவனை ஆக்கி எந்த விதக் குறைவு மில்லாமல் ஆண்டு வந்தான். பல ஆண்டு வாழ்ந்து இயற்கை தரும் மூப்பைத் தாங்க முடியாமல் இறைவன் திருவடி நிழலை அடைந்தான். இறந்தபின் சொர்க்க நிலை அடைந்தான்.

மதுரை நகரின் வளர்ச்சிக்கு இவன் கால்கோள் செய்தும், எவரும் வியக்கக் கோயிற் பணிகள் செய்தும் வான் புகழ் பெற்று மறைந்தான்.

4. தடாதகைப் பிராட்டி திருவவதாரப் படலம்

வெற்றித் திருமகளைத் தன் தோள்களால் தழுவிய வீரத் திருமகனாகிய பாண்டியன் மலையத்துவசன் கல்வி கேள்விகளில் சிறந்து அறிவும் ஆற்றலும் மிக்க பேரரசனாகத் திகழ்ந்தான். வடமொழியும், தமிழ் மொழியும் அவன் கற்றுப் புலமை பெற்றிருந்தான். இருமொழி கற்று உற்ற வயது வந்ததும் அவன் காரிகை ஒருத்தியைத் தேர்ந்து இவ்வாழ்க்கைத் துணைவியாக்கக் கருதினான்.