பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தடாதகைப் பிராட்டி திருவவதாரப் படல்ம்

31


சந்திரகுலத்தில் பிறந்த இப்பாண்டியன் சூரிய குலத்தில் பிறந்த பேரரசன் சூரசேனன் பெற்ற திருமகளாகிய காஞ்சனமாலை என்பவளை மணம் முடித்தான். பொன் மாலையென அவன் அப்பெண் மகளைப் போற்றி இல்லற வாழ்க்கை இனிது நடத்தினான்.

காதல் மனைவியிடம் அவன் அன்பு செலுத்தி இன்புற்று வாழ்ந்த போதும் துன்பம் தீர்க்க ஒரு மகவை அவர்கள் பெறவில்லை. மகப்பேறு இல்லாத குறையைப் போக்க அக்கால வழக்கப்படி புத்திர காமேட்டி யாகம் ஒன்று செய்தான். யாகக்குழியில் நெய், சமித்து, பொரி முதலியவற்றை இட்டு ஆகுதி செய்தான். அக்கினி சுடர் விட்டு எரிந்ததும் வேள்வியில் வெற்றித் திருமகளாகிய அழகிய பெண்குழந்தை எழுந்து அன்னை காஞ்சனமாலையின் மடியில் வந்து தவழ்ந்தது. உமையே அப்பெண் குழந்தை வடிவில் வந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. அப்பிறவியில் ஒரு சிறுமாற்றம் காணப்பட்டது. மூன்று முலைகள் இயற்கைக்கு மாறாக அப்பெண்குழந்தை பெற்றிருந்தது. அது பாண்டியனுக்குத் திகைப்பை அளித்தது. வருத்தமும் உண்டாக்கியது கவலைப்பட்டான்.

மதுரைச் சொக்கநாதரிடம் முறையிட்டுத் தன் குறையைச் சொல்லி வருந்தினான். தெய்வத் திருவாக்கு அசரீரியாக எழுந்து அவன் துயரைப் போக்கியது. "வேள்வியில் பெற்ற செல்வி தெய்வத்தன்மை கொண்டவள். அவள் வயதுக்கு வந்ததும் வனப்புமிக்க அழகும் கவர்ச்சியும் பெற்று விளங்குவாள். தான் மணக்கும் கணவனை எதிர்ப்படும்போது மூன்றாவது முலை அவளை விட்டு மறைந்துவிடும்; அதனால் கவலைப்படவேண்டாம்"