பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

திருவிளையாடற்புராணம்

என்று உரைக்க அவன் மன நிறைவோடு அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு வேள்விச் சாலையை விட்டு நீங்கித் தன் அரண்மனையை அடைந்தான், தெய்வத் திருவாக்கு அறிவித்தபடி அவளுக்குத் தடாதகை என்று பெயரிட்டுச் சிறப்போடு அவ்வப்போது நடத்த வேண்டிய சடங்குகளைச் செய்து கல்வி கேள்விகளில் வல்லவள் ஆக்கினான். பெண்ணாக அவதரித்த போதும் அவளை வீர மறவனைப் போல யானை ஏற்றம், குதிரைப் பயிற்சி, வாள் வில் பயிற்சிகள் முதலியன கற்றுத் தந்து மறக்குலப் பெண்ணாக மாற்றினான், ஆட்சிக்குரிய தகுதிகள் எல்லாம் மாட்சி பெற அமையும்படி வளர்த்து வந்தான்.

பெண்ணுக்கு மதிப்புத் தந்த காலம் அது . அரசியாவதற்கு வேண்டிய தகுதிகள் அனைத்தும் அவள் பெறச் செய்தான். பராசக்தியாகிய பார்வதியே பாரில் வந்து பிறந்ததால் வீரத் திருமகளாக வளர்த்தார்கள். அவனும் தனக்கு ஆண்மகவு இன்மையால் அவளுக்குப் பட்டம் சூட்டி அரசியாக்கி வைத்தான். மீனாட்சி அம்மையே கோனாட்சி செய்யத் தொடங்கினாள்.

மலையத்துவசன் தன் மகளுக்கு மணிமுடிசூட்டியபின் மண்ணுலக வாழ்க்கையைச் சில ஆண்டுகளே நீட்டித்தான். இயற்கை அவன் ஆயுளை முடித்து விட்ட்து. அவன் பரலோகம் சென்று உயர்நிலை அடைந்தான்.

பெண்ணரசியாகிய தடாதகைப் பிராட்டியார் நீதி வழுவாமல் செங்கோல் ஆட்சி நடத்தினாள்; அறச் சாலைகளையும் அறிவுச் சாலைகளையும் நிறுவித் தருமமும், கல்வியும் வளர்த்துப் புகழைப் பரப்பினாள்.