பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

41


பொன் ஒளி வீசும் தாமரைக் குளத்தில் நீராடித் தத்தம் நெறியில் நியமம் செய்து முடித்தவர்களுள் பதஞ்சலி, வியாக்கிச் பாதர் என்னும் முனிவர் இருவரும் "திருச்சிற்றம்பலத்தில் சிவனாரின் திருநடனம் கண்டு உண்பது அடியேம் எம் நியமம்." என்றனர். அவ்வாறு அவர்கள் கூற "அந்தக் கூத்தை இங்கு நாம் செய்வோம்; எங்கும் நிறைந்த பரம்பொருளுக்குச் சிதம்பரம் இதயத் தானம் ஆகும்; மதுரை துவாத சாந்தத் தானம் ஆகும்" என்று கூற "மன்னவ! ஏனைய அங்கம் யாவை?" எனப் பரமன் சொல்வான் ஆயினார்.

இப்பேரண்டம் பிரமனது சரீரம் ஆகும். இடுப்புக்கு மேல் உறுப்புகள் ஏழ் உலகமாகும்; கீழ் ஏழ் உலகங்கள் ஆகும். நடு இடமே பூலோகம் ஆகும்; இதில் தலங்கள் பெருமை மிக்கனவாகும். அவை திருவாரூர், திருவானைக்கா, அருணாசலம், சிதம்பரம், காளத்தி, காசி, கைலாசம், மதுரை என்பனவாகும்.

ஒவ்வொரு தலத்திலும் தனித்தனிப் பெயர்களோடு உறைகிறோம்.

திருவாரூரில் தியாகேசர் என்றும், திருவானைக்காவில் சம்புநாதர் என்றும், அருணாசலத்தில் அருணாசலேசுவரர் என்றும், சிதம்பரத்தில் சபாபதி என்றும், காளத்தியில் காளத்தீசுவரர் என்றும், கைலாசத்தில் ஸ்ரீகண்ட பரமேசுரர் என்றும் வழங்குவர். மதுரையில் சுந்தரேசர் என அழைக்கின்றனர். மதுரையே எல்லாத் தலங்களிலும் முற்பட்டதாகும். இங்கே உள்ள மூர்த்திகளுள் தாண்டவ மூர்த்தியே மேலானது ஆகும். இந்தக் கோலத்தில் எம் நடனத்தை உங்களுக்குக் காட்டுவோம் என்று விளக்கினார். சுந்தரேசரின் திருக்கூத்துத் தொடங்கியது.