பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

திருவிளையாடற் புராணம்


புவ லோகம், சுவர்க்கலோகம், மகர்லோகம், சனக லோகம், தவலோகம் சத்தியலோகம் வைகுந்தம் இவற்றைக் கடந்து தலைமைமிக்க சிவலோகத்தை அடைந்தனர்.

கணவனை இழந்தவர்க்குக் காட்டுவது இல்லை என்று சிலப்பதிகாரம் கூறும், கைம்மை நோன்பு நோற்ற காஞ்சனை கணவனின் கரம் பற்றி இறைவன் திருவடி நிழலை அடைந்து அமர வாழ்வைப் பெற்றாள். 

11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம்

காஞ்சனையும் மலையத் துவசனும் துறக்க வாழ்வு அடைந்ததால் நாடாளும் பொறுப்பை விட்டு விலக முடியவில்லை. சுந்தரேசுவரர் மக்களுக்கு உயிராக விளங்கித் தக்க முறைப்படி செங்கோல் நடத்திச் சீர் பெற ஆட்சி செய்து வந்தார்.

காஞ்சனையின் காதல் மகளாகத் தடாதகைப் பிராட்டி பிறந்ததால் கயிலை மன்னர் ஆகிய சிவனும் சுந்தரனாக வந்து அரசு ஏற்று நடத்த வேண்டியதாயிற்று. செம்மையான ஆட்சியை நிலைபெறச் செய்ய ஓர் வழி காட்டியாக விளங்கத் தொடர்ந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். ஆண்டுகள் பல கழிய எடுத்த கடமைக்கேற்ப ஒரு வாரிசினை ஏற்படுத்தி மகன் ஒருவனை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று.

தடாதகையே தவச் செல்வியாக வேள்வியில் மூன்று வயது குழந்தையாக அவதரித்தவள் உலகம்ஈன்ற தாயாகிய பிராட்டி ஒரு மகவை மானுடரைப் போலப் பெற மாட்டாள் என்பது தெரிந்ததாகும். எனினும் கருப்பம் உள்ளது போலவும் கரு உயிர்த்துத் திங்கள் பத்துச் சுமந்தது போலவும் நடிக்க வேண்டியது ஆயிற்று.