பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

திருவிளையாடற்புராணம்

ஆறு அசுவ மேத யாகங்கள் செய்து பெயரும் பெற்றான். இன்னும் நான்கு செய்துவிட்டால் இந்திரப்பதவியை இழக்க வேண்டி வரும் என்று அஞ்சி மேலும் யாகங்களைத் தடை செய்ய இந்திரன் நினைத்தான்.

நாட்டின் வளத்துக்குக் கேட்டினை உண்டாக்கி விட்டால் அவன் வேள்விகள் இயற்ற முடியாது என்பதால் வருணனை அழைத்துக் கடல் நீரை எழச் செய்து மதுரையை அழிக்கச் சொன்னான். இந்திரன் ஏவலைத் தாரக மந்திரம் எனக்கொண்டு நள்ளிரவு என்றும் பாராமல் ஏழுகடலையும் ஒன்றாகத் திரட்டி மதுரை மீது ஏவினான்.

சித்தர் வடிவில் சிவபெருமான் தோன்றி "நீ வேலை விட்டு அதனை வற்றச் செய்" என்று சொல்லி மறைந்தார். விழித்து எழுந்த வேந்தன் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் நீரே இருந்தது கண்டு திகைத்து நின்றான். கனவில் வந்த சித்தனார் நகைத்துக் கொண்டே பேசினார்.

“கடலைக் கண்டு நடுங்குவது ஏன்? உன் கையில் இறைவன் தந்த வேல் இருக்கிறதே! என்னசெய்தாய்? அந்த வேலைக் கொண்டு இந்தக் கடலைச் சுடலைவனம் ஆக்கு” என்று சொன்னார்.

சித்தர் சொன்ன படியே இறைவன் தந்த வேலை எடுத்துக் கடல் நீரில் வீச அது சுருக்கென்று ஒலிசெய்து தாக்கக் கடல்நீர் வற்றிவிட்டது. சித்தர் எங்கே என்று திரும்பிப்பார்த்தான். அவர் சிவன்கோயிலுள் நுழைவதைப் பார்த்தான். மீனாட்சி சுந்தரர் ஆக அங்கிருந்து: தனியாட்சி நடத்துவதைக் கண்டான். கண் மகிழ அக்காட்சியைக் கண்டு பின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.