பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்

59

மருட்சி அடையாத உக்கிரமன் அக்கிரமம் செய்த மேகங்கள் அங்கு நிறை குடம் இடுப்பில் வைத்து நடக்கும் பெண்களைப் போல அவன் நாட்டு மலை முகடுகளில் மேய்ந்து கொண்டிருந்தவற்றை விலங்கிட்டு இழுத்துப் பிடித்துச் சிறை செய்தான்.

மேகத்தை ஏகாதபடி சிறை செய்த அச்செயல் இந்திரனின் சினத்தையும் செருக்கையும் தூண்டின. வேல் விடுத்து வருணனை வற்றச் செய்தான். சுமக்க முடியாத ஆரத்தைச் சுமந்து காட்டினான். தம் இச்சைப்படி திரிந்து செல்லும் மேகங்களைச் சிறையிட்டுக் கொச்சைப்படுத்தி விட்டான்; இவன் சாமானியன் அல்லன்; ஏமாளியும் அல்லன். அவனை நேரில் சென்று போரில் வெல்ல வேண்டும் என்று படைகள் திரட்டிப் பார் நோக்கி வந்தான்.

பாண்டிய நாட்டில் அவன் உக்கிரமனைச் சூழ அவன் வக்கிரம் கொண்டு யானை மீது அமர்ந்து சேனைகளைச் செலுத்தி வான் வேந்தனை வளைத்துவாட்டினான்; சூரிய அம்பினை ஏவ உக்கிரன் சந்திர அம்பில் எதிர்த்தான். சிங்க அத்திரத்தை விடுக்கச் சிம்புள் அத்திரத்தில் தடுத்தான். மோகாத்திரத்தை ஏவ அவன் ஞானாத்திரத்தை ஏவினான். விற்போர் நீங்கி மற்போர் செய்து தடுப்போர் இன்றி மண்ணில் உருண்டனர். இந்திரன் குலிசப்படை எடுத்துக் குனிந்து வீச அவன் சிவன் தந்த வளை கொண்டு அவன் தலை முடியில் தாக்கினான். தலை தப்பியது; முடி சிதறியது; தலையைத் தொடாமல் அவன் தலைமையை மட்டும் அது போக்கியது; உயிர் தப்பினால் போதும் என்று உயரப் பறந்து விண்ணுலகு அடைந்தான். அங்கிருந்து தூது அனுப்பி ஓலை எழுதி மேகங்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.