பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேருவைச் செண்டால் அடித்த படலம்

61

களையும் விற்று நாட்டு மக்கள் ஓடும் கையுமாக இருக்கும் நிலை அடைந்தனர்; குன்று போல் குவிந்திருந்த செல்வம் மணல்போல் கரைந்துவிட்டதால் இழந்த செல்வம் ஈட்ட வழியில்லாமல் வகையில்லாமல் விழித்தனர்.

மழை பெய்தால் அவர்கள் பசியற்று வாழ முடியுமேயன்றி வசியும் வளமும் பெற்று வாழ முடியாது. அதனால் வட புலத்தில் மேருமலையில் பொதிந்து கிடக்கும் பொன்னையும் உயர் மணிகளையும் மற்றும் வேண்டும் பொருள்களையும் வேண்டிய அளவு எடுத்து வரும்படி சித்தர் கனவில் கூறினார்.

அடியாத மாடு படியாது; அதனால் செண்டு கொண்டு அதன் சிகரத்தை அடித்தால்தான் கரம்குவித்துவேண்டியன நல்கும் என்று சொல்லி மறைந்தார். "உன் ஆணைக்கு அடி பணியும் மேருமலையில் தேவையானவற்றை எடுத்து வருக! மறுபடியும் அதை மூடி வைத்து உன் பொறியும் குறியும் பொறித்து விடுக” என்றும் கூறினார்.

உடனே உக்கிர பாண்டியன் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு நிமலனாகிய சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு நால்வகைச் சேனையோடு நான்கு வேதம் கற்ற வேதியர் வாழ்த்தி அனுப்பத் தேர் ஏறி வடநாடு புறப்பட்டான். பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் வேங்கடத்தையும் கருநாடகம், மாளவம், விராடம், மத்தியதேசம் கடந்து காசியை அடைந்தான். கங்கையில் முழுகிக் காசி விசுவநாதனை வழிபட்டுப் பின் குமரிக்கண்டத்தையும் பாரத கண்டத்தையும் கடந்து இமயத்தை அடைந்தான்; கிம்புருடம் ஏமகூடம், அரிவருடம், நிடதமலை, இளாவிருது வருடம் முதலிய இடங்களைக் கடந்து மேருமலையை அடைந்தான்.