பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம்

71

வெள்ளி செப்பு ஈயம் பித்தளை இவற்றைச் செம்போன் ஆக்கினார். செல்வரை ஏழையாக்கினார்; ஏழையர் செல்வர் ஆயினர். எட்டி மரம் இனிய காய்களைத் தரச் செய்தார். கல்லாதவரைக் கற்றவர் ஆக்கினார்; இல்லாதவரை வள்ளல்கள் ஆக்கினார். எல்லாம் தலைகீழாகச் செய்து காட்டினார்.

பாண்டிய நாட்டு மக்கள் இப்புதுமைகளை விழித்த கண் மூடாமல் பார்த்துத் திகைப்படைத்தனர். அவரவர் தாம் விரும்பிய பொருளைச் சித்தர்பால் கேட்டுப் பெற்றனர். கிழவர்கள் வாலிபர்கள் ஆயினர்; கிழவிகள் குமரிகள் ஆயினர்; மூப்பை ஒழித்துவிட்டு இளமையாக்கினார்; பேசாத குழந்தைகளைப் பேசவைத்தார். நோயாளிகள் நலம் பெற்று நல்வாழ்வு பெற்றனர்.

இந்த அதிசயத்தை அரசனுக்கு அறிவித்தனர்; அரசன் ஒற்றர்களை அனுப்பிச் சித்தரை அழைத்து வரும்படி ஏவினான். சென்றவர்கள் திரும்பவே இல்லை; அதே போல அமைச்சர்களை அனுப்பி வைத்தான்; அவர்களும் ஒரு சிலர் திரும்பவில்லை; கற்றவரை அனுப்பி அரசன் அழைப்பதாகச் சொல்லி அனுப்பினான்.

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று சொல்லி, வர இயலாது என்று சொல்லி அனுப்பினார். சென்ற அமைச்சர் சிலர் திரும்பி வந்து அரசனிடம் சித்தரின் விசித்திரமான போக்குகளை எடுத்துக் கூறினர் ஆற்றல்மிகு அறிஞராகிய சித்தரைத் தாம் ஒன்றும் செய்ய மூடியாது என்று அரசன் அடக்கத்தை மேற்கொண்டான். சித்தரின் வருகையால் மக்கள் நன்மை பெற்றதை அவனால் உணர முடிந்தது.