பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




21. கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம்

அபிடேக பாண்டியன் சித்தரை அவமதித்துவிட்டோமோ என்று கதி கலங்கினான். தானே சென்று அவரைக் காண அரண்மனை விட்டு வெளியேறி வந்தான்; இதனை அறிந்த சிவபெருமான் இந்திர விமானத்துக்கு வடமேற்குத் திசையில் வந்தருளினார்.

அன்று பொங்கல் திருநாள் ஆகையால் மக்கள் மகிழ்ச்சி பொங்க எங்கும் குழுமி இருந்தனர். அவரை மொய்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களை விலகச் செய்து அரசன் சித்தரை அணுகினான்.

"நீர் யார்? ஊர் எது? சொந்த நாடு யாது? உறவினர் யார்? இங்கு வந்தது எதற்காக? என்று வரிசையாகக் கேட்டான்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்; எமக்கு எந்த நாடும் சொந்த நாடே, காசி நகரத்தில் தங்குவது வழக்கம்; யாசித்து வாழ்க்கை நடத்துவது எங்கள் தொழில்; சித்து விளையாடி மக்களை மகிழ்விப்பது எங்கள் திறமை; வேதம் முதலிய கற்றவன் யான்; ஏதம் எது வந்தாலும் நீக்கித் தருவோம்; எல்லாம் வல்ல சித்தர் என்று என்னை அழைப்பார்கள்" என்றார்.

பாண்டியன் இவருடைய இறுமாப்பைச் சிதற அடிப்பேன் என்று சொல்லிக் கொண்டான்; அதற்குத் தக்க உபாயம் தேடிக் கொண்டிருந்தான்; அந்தச் சமயத்தில் கழனியிலிருந்து கரும்பு ஒன்றைக் களமன் ஒருவன் கொண்டு வந்து தந்தான்; கமுகு போன்று பருத்துத் திரண்டகணுக்களை உடைய அந்தக் கரும்பைப் பக்கத்தில் விமானத்தில் இருந்த கல்லானை அடுத்து