பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருத்த குமார பாலரான படலம்

77

அவர் ஒரு பார்வை பார்த்தார். தாளும் பூட்டும் தாமாகக் திறந்து கொண்டன; உள்ளே சென்று அடுப்புப் பற்ற வைத்தாள். சோறு சமைத்துக் கறியும் செய்தாள். இலை போட்டுச் சோறு பரிமாறி அவர் பசியையும் போக்கினாள்

வள்ளியை மணக்கவந்த முருகன் போல முதிய தோற்றத்தில் வந்த சிவனடியார் காளைப்பருவத்தில் அவள் கண்முன் நின்றார்; கற்பிற் சிறந்த அப்பொற்புடை நங்கை ஆடவன் ஒருவன் தனித்துத் தன் முன் நிற்பதைக் கண்டு அஞ்சினாள்; வியர்த்தாள்; ஒரு புறம் ஒதுங்கினாள்.

வெளியூருக்குச் சென்றிருந்த அவள் மாமனும் மாமியும் கணவனும் அலுத்துக் களைத்து வீட்டுக்குள் நுழைந்தனர்.

அவள் அவப்பெயருக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்நியன் ஒருவனோடு அவள் பேசிக் கொண்டிருந்தாள். அவள் நிலை அதோ கதி தான்; பாலகனாக அவர்கள் முன் தாவத் தொடங்கினார். முதியவராக வந்தவர் காளைப்பருவத்தோடு காட்சி அளித்துக் குழந்தையாகத் தவழ்வதைக் கண்டு கவுரி வியப்படைந்தாள்; இறைவன் திருவிளையாடல் இது என்பது அவள் அறிந்து கொண்டாள்.

"பக்கத்து வீட்டுத் தத்தனுடைய குழந்தை அது; பார்த்துச் கொள்ளச் சொல்லிச் சென்றார்கள்" என்று பக்குவமாக விடை சொன்னாள். எனினும் அக்குழந்தை சைவ வீட்டுப் பிள்ளை என்பதால் அவர்கள் கடிந்து கொண்டனர். "தூக்கி வெளியே எறி" என்று சொல்லி அக்குழந்தையை வெளியே போட்டார்கள். அவளையும் வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னார்கள்.