பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழியஞ்சின படலம்

81


வேடுவனைப்பிடித்துக் கட்டி அடித்து உண்மையைக் கக்கச் சாட்டையால் அடித்தனர். "சோமசுந்தரன் சாட்சியாகத் தான் தவறு செய்யவில்லை" என்று வற்புறுத்திக் கூறினான். அதற்கு மேல் அவனைத் துன்புறுத்துவதை நிறுத்தினர். அவன் கையிலோ வில்லுண்டு; கொலையுண்டு கிடப்பதைப் பார்ப்பனன் கண்டு வந்து சொல்கிறான்; எது உண்மை என்று அறிய முடியாத நிலையில் அரசன் நீதி வழங்க முடியாமல் வேதனை அடைந்தான்.

ஈமச்சடங்கு செய்து விட்டு மறுபடியும் வரச் சொல்வி அப்பார்ப்பனனை அனுப்பிவைத்தான். வேடனை விடுவித்துப் பின் நேரே சோமசுந்தரர் திருக்கோயில் அடைந்து இறைவனிடம் விண்ணப்பித்து விடை காண விழைந்தான்.

"யார் இந்தக் கொலை செய்தது என்று தெரியாமல் கவலையுறுகின்றேன்; மதுரை எல்லையிலே இந்தத் தொல்லை வந்து சேர்ந்திருக்கிறது; உன் அருள் இருக்கும் போது இந்த மருட்சி எப்படி நிகழ்ந்தது? தெரிய வில்லையே; உண்மை காண விழைகின்றேன்; ஒண்மை வடிவான பொருளே! வழிகாட்டி எனக்கு நன்மை செய்து அருள்வாய் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது ஆகாயத்திலிருந்து ஓர் அசரீரி தோன்றி, "தென்னவனே நீ இந்நகர்ப் புறத்து உள்ள செட்டித் தெருவில் இன்றிரவு ஒரு திருமணம் நடக்கிறது. அந்தப் பார்ப்பனனோடு அங்கு வந்து சேர்க, உனக்கு உண்மை உணர்த்துகிறேன்" என்று கூறியது; அத்திருவாக்கைக் கேட்டு அவ்வாறே தானும் பார்ப்பனனும் அம்மண வீட்டிற்குச் சென்று ஒரு புறம் ஒதுங்கி நின்றனர்; மன்னன் மாறு வேடத்தில் அங்கு வந்ததால் அவனை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை.