பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழியஞ்சின படலம்

83

முடிந்தது" என்று இந்த உலகம் பேசும்; அவ்வளவுதான்" என்று பேசினர்.

பார்ப்பனனும் பார்த்திபனும் பார்ப்பனியின் பரிதாபகரமான சாவு நிகழ்ந்ததன் காரணத்தை அறிந்து கொண்டனர். என்னதான் நடக்கிறது என்று இருந்து கவனித்தனர்.

தாலி கட்டும் நேரம்; 'கெட்டி மேளம்' 'கெட்டி மேளம்' என்று உரக்கக் கூவினார்கள். கொட்டிய மேளமும் ஏனைய வாத்திய முழக்கமும் கலியாணக் கூச்சலும் சேர்ந்து அந்தப் பசுவை மருளச்செய்தது. அது திமிரிக் கொண்டு நேரே பந்தலில் மணத்தவிசில் தாலியைக் கையில் வைத்திருந்த மணமகனைக் குத்திக் கொன்றது. அதன் கூரிய கொம்புகள் அவன் வயிற்றைக் கிழித்து அவனைத் தூக்கி வாரிப் போட்டது. மணமகன் பிணமகன் ஆனான்; வாழ்த்தொலி பறையொலியாகியது. சிரித்துப் பேசி மகிழ்ந்தவர்கள் அழுது அவலித்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டனர்; பசுந்தோகை போன்ற மணப்பெண் மகிழவேண்டியவள் மனம் குன்றி குமைந்து நின்றாள். அவர்கள் அடைந்த துன்பம் தான் அடைந்த துன்பத்தைவிட மிகுதி என்று பார்ப்பனன் அறிந்தான். அந்த அவலச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டுப் பாண்டியனோடு அரண்மனை சேர்ந்தான்.

பார்ப்பனனின் முறையீடு தவறு என்று முடிவு செய்யப்பட்டது. அவனுக்கு நிறையப் பொருள் தந்து "மற்றொருத்தியை மணந்து நீ அக்குழந்தைக்குப் பாதுகாப்புத் தருக" என்று சொல்லி விடை தந்தான். மதுரைக்கு வந்த பார்ப்பனன் இழப்பை ஈடு செய்யும்