பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

திருவிளையாடற்புராணம்


அனந்த குணபாண்டியன் சிவனை வணங்கி அவனருளால் குலபூடண பாண்டியன் என்னும் நன் மகனைப் பெற்று அவனிடம் உரிய வயதில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சிவலோகம் சேர்ந்தான். 

30. மெய்க் காட்டிட்ட படலம்

குணபூடண பாண்டியனுக்கு நம்பிக்கை மிக்க சேனைத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் சுந்தர சாமந்தன் என்பது. அவன் சிவனடியாரைப் போற்றி வணங்கி அவர்களுக்கு வேண்டுவன கொடுத்து வந்தான். கொடுத்துக் கொடுத்து அவன் கைகள் சிவப்பேறின. அவன் விழிகள் அடியார் வரும் வழியை எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன. அமைதியான காலத்தில் அறங்கள் பல செய்ய அரசனும் ஒப்புதல் அளித்தான்.

வேடர்களுக்குத் தலைவனாக இருந்த சேதிராயன் என்பவன் தன் எல்லைமீறி அரசனுக்குத் தொல்லைதரக் காத்திருந்தான்; படை பலமும் துணிவும் உடைய அவன் முரட்டுத்தனம் மிக்கவனாக இருந்தான்; அவனை எதிர்ப்பது என்பது எளிய செயல் அன்று. அவன் படை யெடுத்து வருவான் என்ற செய்தி கேட்டு நடுங்கிய பாண்டியன் தன் சேனைத் தலைவன் சுந்தரசாமந்தனை அழைத்து, "நாம் தற்காப்பாக மேலும் சேனைகளைத் திரட்ட வேண்டும். நம்மிடம் உள்ள பரிகளும் குதிரை வீரர்களும் போதா. நால்வகைச் சாதியரிடையே வாட்ட சாட்டமான வாலிபர்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்குப் போர்ப் பயிற்சி தந்து வீரர்கள் ஆக்குவதற்கு எவ்வளவு செலவானாலும் கவலை இல்லை; எடுத்துக் கொடு" என்று சொல்லி நிதிகள் வைத்திருந்த அறைகளின் சாவியை அவனிடம் கொடுத்து விட்டான்.