பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

87


யோகம் பத்தியோகம் என இருதிறப்படும் என்பது மேலே விளக்கப் பெற்றது.

பத்தியோகத்தில் உறைத்து நின்று இறைவனையடையப் பெற்றவர்களது பெருமையினை விரித்துக் கூறுவன பின்வரும் திருக்களிற்றுப்படியார் திருப்பாடல்களாகும்.


52. கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்
கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக்-கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்
றாரறியு மன்பன் றது.

இஃது அன்பின்திறத்தால் ஆன்மபோதம் ஒழியுமாறுணர்த்துகின்றது.

(இ-ள்) “கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை” என மாணிக்கவாசகர் அருளிச் செய்தமையால், அத்தகைய பேரன்பின் தன்ம யினைக் கண்ணப்ப நாயனரும் காளத்தியப்பரும் அறிவாரன்றி மற்று யாவராலும் அறியக்கூடிய எல்லையுள் அடங்கிய அன்பு அதுவன்றென்க எ-று.

ஆரும் என முற்றும்மை விரித்துரைக்க.

‘முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறு வேதகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றும்அற
அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ’

(பெரிய-கண்ணப்ப. 154)

எனவியந்து போற்றுவர் சேக்கிழார் நாயனார்.


53. அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க-அவிழ்ந்தசடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல்.

இதுவும் அது.

(இ-ள்) நூல்கள் பிரிந்த விரிந்த கந்தைத் துணியில் குழைந்த களியமுதினை மலர்ந்த உள்ளத்தோடு அவிழ்த்து நிவேதிக்க அக்களியமுது விரிந்த சடையினையுடைய நடராசப் பெருமானுக்கு இனிய திருவமிர்தாயிற்று; மெய்யன்பினையுடைய சேந்தனார் ஆன்மபோதங் கெடச் செய்த அன்பின் செயல் அதுவன்றோ எ-று.