பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

'பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து
வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிசடைமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவுந் திருவமிர் தாகியதே'

(கோயில் திருப்பண்ணியர் விருத்தம்-86)

எனவரும் நம்பியாண்டார் வாய்மொழியை அடியொற்றி யமைந்தது. இத் திருக்களிற்றுப்படியாராகும்.


54. சுரந்த திருமுலைக்கே துய்யசிவ ஞானஞ்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச்-சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு.

இதுவும் அது.

(இ-ள்) பால்சுரத்தற்கிடமாகிய உமையம்மையார் தனத்தினின்றும் தூய சிவஞானமாகிய பாலைப் பொழிதலால் அதனைத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் பருகியருளினார், என்று அறிந்தார் சொல்லக் கேட்ட அளவிலேயே பிள்ளையார்பாற் கொண்ட மகன்மைக் கேண்மையால் பால்சுரக்கின்ற தனமுடையராயினார் தென்பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார், அன்புநிறைந்த உள்ளத்தராகிய பாண்டிமாதேவியாரது அன்பிருந்த முறைமை (அளவிடப்படாத) அத்தன்மையதாம். எ-று.

எண்ணரிய சிவஞானமாகிய இனிய அமுதத்தை எவ்வுயிர்க்கும் என்றும் சுரத்தற்கிடனாவது உண்ணாமுலையம்மையாகிய இறைவி திருமுலையென்பார் “சுரந்த திருமுலை” என்றார். தூய என்னுஞ்சொல் துய்ய எனத்திரிந்தது. சுரந்து-சுரத்தலால். பிள்ளை என்றது காழிக் கவுணியப்பிள்ளையாரை. ‘அம்மையேயப்பா’ என அழுத நிலையினைக் கண்டு பால்சுரந்த உமையம்மையாரினும் அம்மையே என அழுதார் எனக் கேட்டஅளவிலேயே பால்சுரந்த பாண்டிமாதேவியாரது தாயன்பின் திறம் மிகவும் சிறந்து விளங்குதலால் அது நம்மனோரால் அளவிட்டுரைக்கும் எளிமையதன்று என்பதாம்.

இத்திருக்களிற்றுப்படியார் திருப்பாடற்பொருளை இனிதுவிளக்கும் முறையில் அமைந்தது,

இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்னின்-நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா
இங்குயர்ந்தார் யார்சொல் எனக்கு.