பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இன்ப அன்பு” என அடை கொடுத்தோதினார் அருண்மொழித் தேவர்.

இறைவன்பாற் பத்தி செய்தல் என்பது கண்ணப்ப நாயனார்க்குப் போன்று முன்னைத்தவத்தால் இயல்பாகக் கைகூடுவதன்றிக் கல்வியறிவினாற் செய்துகொள்ளப்படுவ தன்றென்பதும், செல்வக்காலையில் மட்டுமன்றி நல்குரவிலும் அத்தகைய அன்பு வெளிப்பட்டு விளங்கும் என்பதும், தாயன்பின் வெளிப்பாட்டுக்கு முலைப்பால் அடையாளமென்பதும், வீடுபேற்றுக்குச் சாதனமாவது இத்தகைய அன்பேயென்பதும் இந்நான்கு வெண்பாக்களாலும் முறையே விரித்துரைக்கப் பெற்றமை காணலாம்.


56. எல்லா ரறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லு மிடத்தளவுஞ் சென்றறிந்தேன்-வல்லபடி
வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட விதம்.

இனி மேற்கூறியவாறு பத்தியோகம் என்பது யாவராலும் எளிதிற் கூடுதற்கு அரிது என்றும், படிகால் முறைமையிலே கூடுதற்குரியது ஞானயோகம் ஆதலின் அதுவே மலவாதனை தீர்ந்திருத்தற்குரிய ஏணிப்படி நெறியாம் என்றும் அருளிச் செய்கின்றது.

(இ-ள்) எல்லாச் சமயங்களிலும் எல்லாச் சாத்திரங்களிலும் உண்டான கருத்துப்பொருள்களை என் அறிவினால் ஆராயத்தக்க அளவும் சென்று ஆராய்ந்தறிந்தேன். அவை எல்லாவற்றினும் துன்பங்கள் அறுகைக்குக் கண்ட முறைமையாவது குருவின் அருளால் பழகி வல்ல முறையில் ஆன்மபோதமாகிய வாதனையைப் போக்கிப் பேரறிவுடன் ஒன்றியிருத்தலாகிய இந்த ஞானயோகமே எ-று. -

எல்லார் அறிவுகள் என்றது, எல்லாச் சமயத்தார்களும் மெய்யெனக் கொண்ட தத்தம் சாத்திரங்களை. தாற்பரியம் - கருத்து. என்னறிவு என்றது, உலகப் பொருள்களை யாராய்தற்கு அளவுகருவியாகிய ஆன்ம சிற்சத்தியை. செல்லுமிடமாவது, அவ்வறிவு சென்று ஆராய்ந்து துணிதற்குரிய பொருளெல்லையினை. சென்றறிதலாவது நீள நினைந்து நுணுகியுணர்தல். வல்லபடி - குருவின் உபதேசத்தாற் பழகியறிந்தபடி. வாதனையாவது, ஆன்மபோதப் பழக்கமாகிய வாசனையுணர்வு. மாற்றும் வகையாவது, தற்போதம் தோன்றாதவாறு சிவபோதத்துள் ஒன்றி அடங்கியொழுகுந் திறம். இதுவே ஞான யோகம் எனப்படும். மற்று - அசை. அவற்றுள் - அச்சமய நூல்களுள். ஏதம் - மல வாதனையாகிய குற்றம். அறுதல் - நீங்குதல். ஏதம் அறக் கண்ட விதம், வாதனையை மாற்றும் வகையிதுவே என முடிக்க.