பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


வளர்த்துச் சிவகதியாகிய விளைவினைப் பெறுவதொழிந்து சிவஞானத்திற்கு வித்தாகிய சிவம் எவ்வாறிருக்கும் எனத் தம் ஆன்ம போதத்தால் தேடத் தொடங்கித் தமக்குத் திருவருளாற் கிடைத்த சிவஞானமாகிய முளையினைப் பேணி வளர்க்காது நெகிழ விட்டவர் அறிவுகலங்கிய பித்தர்களேயாவர். தற்போதம் மிகுந்த அந்நிலையில் அவர்களாற் பெறுதற்குரிய பேறெதுவும் இல்லை எனப் பிறிது மொழிதல் என்னும் அணியமைய விரித்துரைப்பது இத்திருவுந்தியாராகும்.

‘கருதிய பொருள்தொகுத் ததுபுலப் படுத்தற்
கொத்ததொன் றுரைப்பது ஒட்டென மொழிப'

என்றவாறு ஒட்டணியமைந்த இத்திருவுந்தியாரிற் கருதிய பொருளை உவமையணியமைய விரித்துரைக்கும் முறையிலமைந்தது, ‘வித்து மதன் அங்குரமும்'எனத் தொடங்கும் திருக்களிற்றுப்படியாராகும்.

"இதனுள் நேயத்திலே பொருந்தியிருந்தாலும் தானென்றொரு முதலாகாமலிருக்க வேணுமென்பது உவமையாற் கண்டு கொள்க” - என்பது பழையவுரை.

இனி, இத்திருப்பாடற்குப் பின்வருமாறு வேறுபொருள் கொள்ளுதற்கும் இடமுண்டு.

“வித்தாகிய ஞானாசிரியனைத் தேடிப் பாசஞானம் பசுஞானமாகிய முளையையிழந்தவர்கள் திருவருளாகிய பித்துக் கொண்டவர்கள். இப்படியன்றி முன்சொன்ன இருவகை ஞானங்களாலும் பெறுகின்ற பிரயோசனம் ஏதிருக்கிறது? நெஞ்சமே சொல்வாய் எ-று."

“முத்தி முழுமுதல் பாதாளத்தார் வித்து”

என்பது திருவாசகம்.

“முத்திக்கு வித்தான மோனக் கரும்புவழி
தித்தித் திடவிளைந்த தேனே பராபரமே”

என்பது தாயுமானார் அநுபவ மொழி.

பெறுவதிங்கென்பெணே - என்பதும் பாடம்.

சிவமாகிய வித்தைத் தேடிப் பெற்றுழி அதன் முளையாகிய திருவருளைக் கைவிட்டவர்கள் மயக்கம் பிடித்தவரேயாவர்; அருளைக் கைவிட்டவர் அவ்விடத்து என்ன பெறுவது கருதியோ (ஒன்று மில்லை) எ-று.