பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

93


பத்தியா யுணர்வோர் அருளைவாய் மடுத்து ... ... ...
. . . . . . . . . . . . . . . . . .

சத்தியாய்ச் சிவமா யுலகெலாம் படைத்த
    தனிமுழு முதலுமா யதற்கோர்
வித்துமா யாரூ ராதியாய் வீதி
    விடங்கராய் நடங்குலாவினரே

"என்புழிச் சிவம் வித்தெனக் குறிக்கப் பெற்றுள்ளமை காண்க.

வித்தாகிய சிவத்தைத் தேடி அதனையுணர்வதற்குக் கருவியாகிய முளைபோன்ற சிவஞானத்தைக் கைவரப்பெற்றிருந்தும், நெகிழ விட்டவர்கள் பசுபாச விகற்பங்களாகிய மயக்கமுற்றவர்களேயாவர்; நெஞ்சமே சிவப்பேற்றுக்குச் சாதனமாகிய திருவருளையிழந்த அந் நிலையில் அவர்களாற் பெறுதற்குரிய பயன் யாதுளது? (ஒன்றும் இல்லை என்பதாம்.)

இத்திருவுந்தியாரை அடியொற்றியமைந்தது,


57. வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம்
வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில்-வித்ததனிற்
காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமை யாலற்றார் பேறு.

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும்.

(இ - ள்) மெய்ப் பொருளாகிய இறைவனது திருவருள் ஞானம் விதையும் அதனிடத்தே முளைத்தெழுந்த முளையும் போன்று முறையே காரணமாகிய சிவம் மறைந்தும் காரியமாகிய ஞானம் வெளிப்பட்டும் இருக்கும். காரணமாகிய விதையினையும் அதன் காரியமாகிய முளையையும் மெய்ம்மையாக உணருமிடத்து அம்முளையிடத்தே விதை வெளிப்படத் தோன்றாமையால் அவ்விதையுண்மையினையுணராது அதனை நெகிழவிடுவர் ஒருசாரார். வெளிப்பட விரிந்த முளையுண்மையைக் கண்டவர்களும் திருவருளாகிய அதனைப் பேணிப் போற்றாமையால் அதனாற் பெறுதற்குரிய சிவப்பேற்றை யிழந்தவர்களாவர் எ-று.

மேற் குறிக்கப் பெற்ற திருவுந்தியார்க்கும் அதன் விளக்கமாக அமைந்த இத்திருக்களிற்றுப் படியார்க்கும் ஆதாரமாக அமைந்தது,

வித்தினி லன்றி முளையில்லை யம்முளை
வித்தினி லன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் ஒன்றல்ல வேறல்ல
அத்தன்மைத் தாகும் அரனெறி தானே. (1932)