பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களை உய்யக்கொண்டருளும் முறையும் அவனது அருமையின் எளிய அழகும், அம்முதல்வனால் உணர்த்தப்பெற்ற ஞான நுண்பொருள்களால் விளைந்த சிவாநுபவமும் அவ்வருள் அனுபவத்தைப்பெற்றார் அடையும் பேறும், அப்பெருமக்களால் உலகவுயிர்கள் அடையும் பெரு நலமும் நூல்நுதல் பொருள்களாக அமைந்துள்ளமை காணலாம். சைவசமய அருளாசிரியர்கள் அருளிய திருவருளிலக்கியமாகிய திருமுறைகளின் பொருளை உளங்கொண்டு தோன்றிய சைவ சித்தாந்த ஞான நூல்களில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விருநூல்களும் சைவத்திருமுறைகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாய்க் குருவின் உபதேசத்தாலன்றி உணரவொண்ணாத திருவருள் அநுபவ அரும்பொருள்களை அறிவுறுத்தும் அநுபூதி நூல்களாகத் திகழுதல் காணலாம். சைவத் திருமுறைகளாகிய தோத்திரங்களுக்கும், சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் காலத்தால் இடைப்பட்டுத் தோன்றிய இவ்விருநூல்களும், சைவசமய ஆசிரியர் நால்வர் அருளிய தோத்திரநூல்களுடன் சந்தான ஆசிரியர் நால்வர் அருளிய சாத்திரங்களையும் தொடர்புபடுத்தும் இடைநிலைப் பாலமாக அமைந்துள்ளமையும் இங்குக் கருதத்தகுவதாகும்.

திருவியலூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிச் செய்த திருவுந் தியாரின் பொருள் நலங்களை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிய திருக்களிற்றுப்படியார் என்பது இந்நூலாசிரியர்களின் வரலாற்றில் முன்னர் விளக்கப்பெற்றது. எனவே திருவுந்தியார் ஆகிய முதல் நூலும், அதன் வழித் தோன்றிய திருக்களிற்றுப்படியார் ஆகிய வழிநூலும் மூலமும் உரையும் போன்று நெருங்கிய தொடர்புடையன என்பது நன்கு தெளியப்படும். திருக்களிற்றுப்படியாரில் சைவசமய குரவர் நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளும் சண்டீசர், கண்ணப்பர், அரிவாட்டாயர் முதலிய திருத்தொண்டத்தொகையடியார் சிலரின் வரலாற்றுநிகழ்ச்சிகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றுள்ளன. சைவ சித்தாந்த நுண்பொருள்களை விளக்குந்திறத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறட்பாக்கள் இந்நூலிற் பொன்னே போல் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

இவ்விரு நூல்களும் பொருள்வகையால் ஒன்றே என்பது இவற்றுக்கு உரை எழுதிய தில்லைச் சிற்றம்பலவர் முதலிய முன்னைச் சான்றோரது துணிபாகும். ஆயினும் அப்பெருமக்கள் இவ்விரு நூற்களுக்கும் தனித்தனியே உரை வரையும் பணியளவே செய்து போந்


v