பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


நோக்காதே நோக்கி நொடியாது நொடித்தலாகிய திருவருளின் செயற்பாட்டினை யுணர்ந்து என்பதாம். செய்யாச் செயலிற் செலுத்து தலாவது தன்பணி நீத்துத் திருவருள் வழியடங்கிநிற்றல். “ஆணவமும் எய்யாதே” என இயைத்து, ஆணவமலமும் தேய்ந்தொழியுமல்லவா? எனப் பொருளுரைக்க. எய்த்தல் - தேய்ந்து தன்வலி குன்றுதல். வினா ஏகாரம் எய்க்கும் எனத் தேற்றப்பொருள் தந்தது. உயிர்க்கு ஆசையினை நீளவளர்க்குந் தன்மையது ஆணவமலம் என அறிவுறுத்துவார் “வாஞ்சைக் கொடி வளர்க்கும் ஆணவம்” என அடை புணர்த்தோதினர். “அற்றால்” என்ற இப்பாடத்திற்கு "ஆணவம் அற்றொழியும், அஃதற்றால் சிவானந்தத்தில் அழுந்தியின்புறலாம் என்பார், "ஆணவமும் அற்றால் அறி” என்றார் எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும். அறிதல் என்றது. அழுந்தியறிதலாகிய அநுபவவுணர்வினை. “இத்தால் அறி” என்ற பாடத்திற்கு “இம்முறையினால் அறிவாயாக” எனப் பொருள் கொள்க.


60. ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும்
செய்தா லொருவலுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமற் செய்யும் பொழுது.

இது, தன்பணி நீத்து இறைவனது அருள்வழியடங்கி யொழுகுவார் செய்யும் பூசனைக்கு நூல்களிற் கூறப்படும் எந்த நியமமும் வேண்டா என்று அறிவுறுத்துகின்றது. -

(இ-ள்) ஒருவராலும் செய்யப்படாத முதல்வனது திருவருட் செயலுளடங்கி ஆன்மபோதத்தால் ஒன்றைச் செய்யாமல் முதல்வனது அருளின் வழி நின்று செய்யும்போது, எந்தக் காலமும் வழிபாட்டிற்குரிய காலமாகும். எந்த இடமும் அம்முதல்வனைப் பூசித்தற்குரிய இடமாம். எந்தத் திசையும் எந்தப்பொருளும் முதல்வனைப் பூசித்தற்குரிய திசையும் ஆசனமும் ஆகும். நன்று தீதாகிய எந்த வினைகளைச் செய்தாலும் அவ்வினைத் தொடர்பில் அகப்படாது நீங்கி நிற்றலும் கைகூடுவதாம் எ-று.

சிவ பூசைக்குரிய தூய்மையுடையனவாகக் காலம், திக்கு, ஆசனம் என்பனவற்றை வகுத்துக் கொள்ளுதல் சிவபூசகர்க்குரிய நியமமாகும். இத்தகைய நியமமெதுவும் ஆன்மபோதம் நீங்கித் தன்பணி நீத்து இறைவனது அருள்வழி நிற்பார்க்கு வேண்டப்பெறாதென்பதாம். ஒருவல்-நீங்குதல்.

பாசம் ஒருவிய சீவன்முத்தரிடத்தே காணப்படும் இந்தமுறை பாசத்தொடுகூடி உலகியலில் நிற்பவர்கண் உண்டாகில் அன்னோர் நியமந் தவறிய குற்றமுடையராவர் என்பதாம். இவ்வெண்பாவின் பின்னிரண்டடிகள்,