பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

97


"செய்வா னொருவனுமாஞ் செய்யாச் செயலதனைச் செய்யாமை செய்யும் பொழுது'

எனத் தில்லைச் சிற்றம்பலவருரையிற் பாடம் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

“ஆன்மபோதம் உள்ள அளவும் அறிதற்கு அரிதாகிய அந்த நிராலம்பமானவுண்மை ஒருவன் தன் செயலன்றியே கூடுமிடத்து, எல்லாக் காலமுமாய் எல்லாத் தேசமுமாய் எல்லாத் திக்குகளுமாய் எல்லாத் தொழில்களிலும் நிற்பானொருவனாம் என்க” - என்பது தில்லைச் சிற்றம்பலவர் உரையாகும்.


61. செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோ நாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்க
செய்யாமை செய்யாத வாறு.

இது, முன்னைத்தவத்தால் செயற்கரிய செய்து சிலர் வீடுபெற்றார் எனவும் பணிந்து இறைவன் அருள்வழி யடங்கி நிற்றலை சிவாநுபவத்தைப் பெறுதற்குரிய எளிய வழியாம் எனவும் அருளிச் செய்கின்றது.

(இ-ள்) முன்னைத் தவமுடைய பெருமக்கள் சிலர் உலகில் யாவராலும் செய்தற்கரிய அருஞ்செயல்களாகிய வலிய தொண்டுகளைச் செய்து உரையுணர்வுகளால் அடைதற்கரிய சிவபரம்பொருளை யடைந்து இன்புற்றார்கள், அவ்வரிய தொண்டுகளைச் செய்யும் ஆற்றல் பெறாத நாம் தற்போதத்தால் எதனையும் செய்யாமையாகிய செயலைச் செய்து வினைத்தொடர்பினை யறுத்தற்குரிய எளியவழியிருந்தும் தன்பணி நீத்து இறைபணி நிற்றலாகிய அச்செயலைச் செய்யாதிருப்பது அந்தோ மிகவும் இரங்கத் தகுவதாகும் எ-று.

செய்தற்கரிய செயல்களாவன, சிறுத்தொண்டர் சண்டீசர் அரிவாட்டாயர் முதலிய நாயன்மார்கள் சிவனடியாரிடத்தும் சிவனிடத்தும் பேரன்புடையராய் நிகழ்த்திய அருஞ்செயல்கள். மெல்வினை வல்வினையென இருவகைப்படும் சிவதன்மங்களுள், இச்செயல்களை வல்வினை என்றவகையில் திருக்களிற்றுப்படியார் 18, 19, 20 ஆம் பாடல்களில் இவ்வாசிரியர் விளக்கியுள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும். இத்தகைய வலியதிருத்தொண்டுகளைத் துணிந்து செய்தவராகக் கூறுதற்குரியார் ஒருசிலரே என்பதுபடச் “சிலர்” என்றார்.

இப்பாடலில் “எய்தற்கு அரியது" என்றது, ஒருவராலும் சென்றடைதற்கரிய சிவபரம்பொருளை. இச்செய்யுள்,