பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்” (489)

எனவும்,

“செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்” (29)

எனவும் வரும் திருக்குறட் சொல்லையும் பொருளையும் அடியொற்றி அமைந்துள்ளமை கூர்ந்து நோக்கத் தகுவதாகும்.

"ஐயோ’’ என்றது, உரிய செயல்களைச் செய்யாது வீணே வாழ்நாளைக் கழித்தோமே என இரங்குதற் பொருளில் வந்தது.

செய்தற்கு அரிய ஆவன, புலன் வழி போகாது மனத்தை ஒரு வழிப்படுத்திச் செய்தற்குரிய இயமம் நியமம் முதலிய எண்வகை யோகவுறுப்புக்கள் எனினும் பொருந்தும். “எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்” என மனைவியார் சொன்ன சூளால் இளமை துறந்த திருநீலகண்டக் குயவநாயனார் முதலிய நாயன்மார் செயல்கள் செயற்கரிய செயல்களாகவே கொள்ளப்படும் என்பது, “ஆன்ம போதத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றையுஞ் செய்து திரு நீலகண்டக் குயவனார் முதலிய சிவநாயன்மார்கள் பெறுதற்கரிய பேற்றைப் பெற்றார்கள்’’ என வரும் பழையவுரையாற் புலனாகும்.

“செய்தற்கு அரிய செயல்பலவுஞ் செய்து எய்தற்கரியதனைச் சிலர் எய்தினர்” எனவே, பலர் தங்களால் முறைப்படி செய்தற்குரிய திருத்தொண்டுகள் பலபுரிந்து சிவபரம்பொருளையெய்தினர் என்பது தானே பெறப்படும். செய்யாமை செய்து செயலறுத்தல் என்றது, செய்தற்கு அரியனவும் உரியனவும் ஆகியவற்றுள் எதனையும் செய்யாது திருவருளின் வழிநின்று தன்பணி நீத்தல். எனவே எய்தற்கரிய சிவாநுபவத்தை யடைதற்குரிய வழிகள் செயற்கரிய செய்தல், செயற்குரிய செய்தல், செய்யாமை செய்து செயலறுத்தல் என முத்திறப்படும் என்பதாம்.

இவ்வகைகளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, அடுத்து வரும் செய்யுளாகும்.

62. இப்பொருள்கள் யாதேனு மேதெனினும் ஒன்று செய்தல்
எப்பொருளுஞ் செய்யா தொழிந்திருத்தல்-மெய்ப்பொருளைக்
கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம்
உண்டிருப்ப தென்னே வுரை.

இது, சிவபரம்பொருளை யடைதற்குரிய செயல்களை விரித்துரைக்கின்றது.