பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


அடங்கக்கொண்டு நுகர்தல். “அழலார்வண்ணத் தம்மானை அன்பிலணைத்து வைத்தேனே’’ (4-15-7) “மேலைவானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே” (4 - 15 - 8) என அப்பரடிகளும், "மெய்ம்மையார் விழுங்கும் அருளே” (நீத்தல்- 17) எனத் திருவாதவூரடிகளும், “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை” (திருவிசைப்பா-2) எனத் திருமாளிகைத்தேவரும் “என் பொன்மணியை இறைவனே யீசனைத் தின்பன்கடிப்பன் திருத்துவன் நானே” (2989) எனத் திருமூல நாயனாரும் அருளிய அநுபவ மொழிகள் இங்கு உளங்கொளத்தக்கனவாம். “மீண்டும் தெரிந்துந் தெரியாது நிற்றல்” என்றது, சிவத்தோடு ஒன்றியுணரும் சிவஞானிகள்பால் முன்னைப் பழக்கத்தால் ஒரோவழி ஆன்ம போதமும் அதுகாரணமாகப் பிரபஞ்ச வாதனையும் அதற்கு வாயிலாகிய உடம்பு முதலிய மாயாகாரியப் பொருள்களும் வாசனை மாத்திரத்தால் மெலிதாய் வந்து மூளுமாயினும் அவர்களது உள்ளம் என்றும் பிறழவொட்டாத சிவமாகிய அச்சினையே பற்றி நிற்றலால் தம்முன் அவை மீளவும் தோன்றித் தாக்காதவாறு நிற்பர் என்பார், “தெரிந்துந் தெரியாது நிற்பர்” என்றருளிச் செய்தார். சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பெற்ற சிவனடியார்களுக்குப் பிரபஞ்சவாதனை ஒருகால் தோன்றினாலும் மீளவந்து அவர்களைத் தாக்கும் ஆற்றலின்றிச் சிதைந்தொழியும் என்பதாம்.

“விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை’’

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.


67. ஆதனமும் ஆதனியு மாய்நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச்
சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர்
ஏதமறக் கண்டவர்க ளின்று.

இது, சிவஞானிகளது திறம் உணர்த்துகின்றது.

(இ-ள்) திரோதாயியென்னும் மறைப்பு ஒழிய இறைவனைத் தலைவனாகவும் தம்மை அவனுடைய உடைமைப் பொருளாகவும் கண்டுணர்ந்த சிவஞானிகள், பாசப்பிணிப்புற்ற உயிர்த் தொகுதிகட்கு இருப்பிடமாகிய தத்துவங்களும் அவற்றினிடமாக விளங்கும் உயிர்த் தொகுதிகளுமாக எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்து நிற்கும் இறைவனே அவனது திருவருளாலே ஞானமே திருமேனியாகக் கொண்டுவந்தருளிய குருவினலே தெளியவுணர்ந்து பேருணர்வு பெற்றுத் தம்முயிரை ஞானத்திரளாய் நின்ற இறைவன் கையிலே ஒப்படைத்து ஞானத்தின் மேலாம் நிலையாகிய அந்தச் சிவமாகியே நிற்பார்கள், உடம்போடு கூடிய இம்மையிலும் எ-று.