பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

113


என்னுந் தொழிற் சொல்லை நீற்றறை, நஞ்சு என்னும் ஏனைய இரண்டினோடும் கூட்டுக. கரியின், நீற்றறையின் நஞ்சின் என்புழி ஐந்தாம் வேற்றுமை இன்னுருபு நீக்கப் பொருளில் வந்தது. திருவாமூரிற் றோன்றினமை பற்றித் “திருவாமூராளி” என்பது திருநாவுக்கரசர்க்குப் பெயராயிற்று. ஆளி-ஆள்பவன்; இ, வினைமுதல் விகுதி.


72. மோக மறுத்திடினா முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன வவர்தம்மைத்-தோகையர்பாற்
றூதாகப் போகவிடும் வன்றொண்டன் றொண்டுகளை
ஏதாகச் சொல்வே னியான்.

இது, சுந்தரமூர்த்தி நாயனார் சிவனருளால் நிகழ்த்திய அற்புதச் செயல்களுள் ஒன்றனைச் சுட்டி, அவரது தொண்டின் திறங்களை நினைந்து வியந்து போற்றுகின்றது.

(இ-ள்) “காமம் எனப்படும் மோகத்தை வேரறக் களைந்த மெய்ஞ்ஞானியர்க்கே நாம் வீடுபேற்றினை நல்குவது” எனத் தாம் அருளிச்செய்த சிவாகமங்களிலே திட்பமுறக் கூறிய சிவபெருமானையே சங்கிலியார் பரவையார் ஆகிய நங்கையர் இருவர் பாலும் தம் விருப்பத்தினை நிறைவேற்றும் பணியினையுடைய தூதராகப் போகவிடும் தோழமைத்திறம் வாய்ந்தன வன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்தருளிய தொண்டுகளை எளியேன் எத்துணைப் பெருமை வாய்ந்தனவென்று அளவிட்டுரைக்கவல்லேன். எறு.

நம்பியாரூரர் மணம்வந்த புத்துாரில் நிகழவிருந்த தம் திருமணத்தில் வெண்ணெய்நல்லுர்ப் பெருமான் கிழவேதியனாகி வந்து அற்புதப் பழ ஆவணங்காட்டி அத் திருமணத்தினத் தடுத்து வெண்ணெய் நல்லூர்ச்சபையில் ஆரூரன் என்னடியான் என வழக்குரைத்து வலிய ஆட்கொண்டருளினமையால் வன்றொண்டன் எனப் பெயர் பெற்றார் என்பது வரலாறு. திருவாரூர் இறைவர் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் என்றருள்புரியத் தம்பிரான் தோழராகிய சுந்தரர் திருவாரூரிறைவர் திருவருளால் அடியார்க்குத் தொண்டுபட்டுத் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தினை அருளிச் செய்தனர் என்பது வரலாறு. தென்தமிழ்ப்பயனாய் வந்த திருத்தொண்டத் தொகை பாடிய வன்றொண்டர் நிகழ்த்தியருளிய அற்புதச் செயல்கள் எல்லாவற்றையும் “வன்றொண்டன் தொண்டுகள்” எனத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் தொகுத்துக் கூறிய திறம் உணர்ந்து போற்றத் தகுவதாகும்.

15