பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


நம்பியாரூரராகிய வன்றொண்டரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு பாடப் பெற்ற வரலாற்றுக் காப்பியமாகிய திருத்தொண்டர் புராணத்தில் தொடக்கம் முதல் முடிவுவரை வன்றொண்டர் தொண்டுகளாகிய அற்புதச் செயல்கள் இடம் பெற்றுள்ளமை காண்க.


73. பாய்பரியொன் றந்தப் பரமானங் தப்பரனைத்
தூயதிரு வாய்மலராற் சொற்செய்து-மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத வூராளுந் தேன்.

இது, திருவாதவூரடிகள் சிவனருளால் உலக மக்களை உய்வித்தற் பொருட்டு வழங்கிய மெய்யுணர்வின் திறத்தினை வியந்து போற்று கின்றது.

(இ-ள்) வேதத்தினைத் தாவிவரும் குதிரையாகக் கொண்டு, பொருந்திய பேரின்பவுருவினனாகிய அம்முதல்வனைத் துாய்மை பொருந்திய மலர்போலுந் திருவாயில் தோன்றிய சொன்மலர்களாற் பாமாலை பாடிப் போற்றி (அப்பனுவலை அன்பினால் ஒதுதலால்) வஞ்சனையைச் செய்யும் கருப்பத்திற்படும் கொடிய துன்பத்தின. எம்மனோர் அறியாதவாறு பிறவிப் பிணியை நீக்கியருளினான். அவன் யாரெனின் திருவாதவூரில் தோன்றி அதனையாண்டருளிய தலைவன், தன்னை நினைவாருள்ளத்தே தேன் போன்று இனித்தலைச் செய்யும் மாணிக்கவாசக மூர்த்தியென்று அறிவாயாக எ-று.

உரையின் வரம்பும் பொருளின் எல்லையுங்கடந்து அப்பாலைக் கப்பாலான சிவபெருமான், மதுரையிற் பாண்டியன் கண்டு களிக்க மணிவாசகப்பெருமான் பொருட்டுத் தாவிவரும் குதிரையின்மேற் பொருந்தி யெழுந்தருளிப் பேரின்பம் நல்கினமையால் “பாய் பரி ஒன்றுஅந்தப் பரமானந்தப் பரன்” என்றார். ஒன்றுதல் - பொருந்தி யமர்தல், திருவாதவூரடிகளது மலர்போலுந் திருவாய் வாய்மையே பயிலுந் தூய்மையும் மலர்போலும் அழகும் வாய்ந்தது என்பார், "தூய திருவாய்மலர்” என்றார். சொற்செய்தல்-சொன் மாலைபாடிப் போற்றுதல். இனி, “சொற்செய்தல்” என்பதற்கு மாற்றம் மனங் கழிய அப்பாற்பட்ட பேரின்பப்பொருளாகிய இறைவனைத் திருவாசகச் செழுமறையாகிய சொல்லுருவினனாக அமைத்துத்தந்து அதனை ஓதியும் கேட்டும் உணர்ந்தும் உலக மக்கள் விழுமிய பேரின்பத்தினை நுகரும்படி செய்தல் எனப் பொருளுரைத்தலும் உண்டு.

“மதுரைப் பெருநன் மாநகரிருந்து
குதிரைச் சேவகனாகிய கொள்கையும்”

எனவும்,