பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

115


அரியொடு பிரமற் களவறியாதவன்
பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்

எனவும்,

‘நற்பாற்படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்
சொற்பால தானவா தோணோக்க மாடாமோ?’

எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் இங்கு நினைத்தற்குரியவாகும். மாயம் - வஞ்சனை. வாதை - துன்பம், கருவாதை - தாய்வயிற்றிற் கருவாக விருந்து உயிர்கள்படும் பிறவித்துன்பம். தமக்குக் குருவாக எழுந்தருளிவந்து மெய்யுணர்வு நல்கிய இறைவனைத் திருவாசகமாகிய தேனின் உருவமாக்கி உலகத்தார் ஓதியும் கேட்டும் உணர்ந்தும் சுவைத்து மகிழ்ந்து தம்முடைய பிறவிப் பிணியைப் போக்குதற்கு வழி செய்தருளினமை திருவாதவூரடிகள் இறைவனருளால் நிகழ்த்திய மேலான அற்புதச் செயல் என்றவாறு.

‘என்னிற் கருணை வான் தேன் கலக்க
அருளொடு பராவமு தாக்கினன்'

எனவும்,

‘அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டுசெய்தனன்’ எனவும் திருவாதவூரடிகள் தம் திருமேனி இறைவனருளால் தேனான தன்மையினை எடுத்துரைத்தலால் 'திருவாதவூராளுந் தேன்' எனப் போற்றியது மிகவும் பொருத்த முடையதேயாகும்.

இனி, இப்பாடலின் முதலடிக்கு “பாய்பரியோன் றந்த பரமானந்தப் பயனை” எனப் பாடங்கொண்டு, “பரமேசுவரன் கொடுக்கப்பட்ட மேலாகிய ஆனந்தமாகிய பிரயோசனத்தைத் தூய தாமரை மலர் போன்ற திருவாக்கினாலே செய்யுளாக்கி மாயமாகிய கருக்குழித் துன்பத்தை நாம் அறியாதபடிக்கு அனுக்கிரகம் பண்ணினன்காண் தேன்போன்ற மாணிக்கவாசகன்” என உரை கூறுதலும் உண்டு.

இப் பாடத்திற்கு,

“சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம்பரியப் பரிமேற்கொண்டான் தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்”

எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி துணைசெய்வதாகவுள்ளமை கூர்ந்து நோக்கற்பாலதாகும். இவை நான்கு திருப்பாடல்களாலும் இறைவனருள் கைவரப்பெற்ற சைவ சமயகுரவர் நால்வர் பெருமையும் முறையே விளக்கப் பெற்றுள்ளமை ஓதிமகிழ்தற்குரியதாகும்.