பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

117


யாலும் இறைவனது திருவருளுக்கு அணுக்கராய் மிகவும் சிறப்புரிமையுடைய அடியார்கள் என்று அறிவாயாக எ - று.

இதன் இரண்டாமடியில் ‘அன்ன வகையே யரனருளும்’ என்பதும் பாடம்.

நாடாளும் வேந்தனுக்குத் தனது ஆணைவழி யொழுகும் குடிமக்கள் அனைவரையும் ஒப்பக்காத்தல் வேண்டும் என்னும் பொதுமை நோக்கு எப்பொழுதும் உண்டாயினும், தன்பாற் பேரன்புடையராய் ஒழுகும் நண்பர்களைத் தானாகப் பார்த்தும், தன் ஆணைக்கு அஞ்சியிருந்தவர்களை ஒவ்வோரிடங்களில் வைத்தும் நற்குடிக்குரிய பண்பின்றி மன்னுயிர்கட்கு இன்னல் செய்வோரைத் தண்டித்துத் திருத்தியும் இங்ஙனம் செய்கின்ற செயல்களெல்லாம் குடிமக்கள் மேல் வைத்த அருளின் திறமாதல் போன்றே, மன்னுயிர்களின் முதல்வனாகிய இறைவன் எல்லாவுயிர்களிடத்தும் ஒப்ப அருளுடையனாயினும் ஆன்மாக்களுக்கு ஆணவ மலங்கழலும் பக்குவம் உண்டாகும் வரையிலும் உயிர்களுக்கு உடல் கருவி உலகு நுகர்பொருள்களையும் வினைப் பயன்களையும் கூட்டி இன்ப துன்ப வாதனைகளிலே சிலரை நிறுத்தியும், திருவருட் பதிவின் மிகுதி குறைவுகட்கேற்பச் சிலரைப் பதமுத்திகளில் வைத்தும், திருவருட்பதிவு மிகுதியும் உடையவர்களைத் தன் திருவடியிற் சேர்த்தும் அவரவர்களின் பக்குவ நிலைகட்குத் தக்கவாறு படிமுறையே அருள்புரிந்தும் உய்யக்கொள்ளுதல் இறைவனது பெருங் கருணைத் திறமாதலின், வேண்டுதல் வேண்டாமை யிலானகிய அம் முதல்வன் நடுநிலையிற் பிறழாதவன் என்பதனை உள்ளவா றுணர்ந்து நீயும் ஆன்மபோதங்கெட இறைவனது திருவருள்வழி ஒத்துச் சென்று சிவயோகநிலை பெற்றுப் பேரின்பம் நுகர்வாயாக என அறிவுறுத்தி யருளியவாறு.

இங்ஙனம் இறைவனோடு ஒத்து வாழும் அடியார்கட்கு எடுத்த உடம்பு உள்ளவரையிலும் தொடுத்த நுகர்வினைப் பயனை நுகர்ந்தே கழிக்க வேண்டுதலின் அங்ஙனம் பிராரத்த வினையினை நுகரும்போது கருவிகரணங்கள் கூட வேண்டுதலானும் இவற்றின் வசப்பட்டு நுகரும் உபாயமும், இங்ஙனம் நுகரும்போதே விருப்பு வெறுப்புக்களால் ஆகாமியம் வந்து ஏறாமல் நிற்கும் உபாயமும், அருள்வழி நின்றவர்க்குக் கட்டுநிலையில் நுகரப்படும் சிற்றின்பமே வீட்டு நிலையில் நுகரப்படும் பேரின்பமாக அமைதற்குரிய உபாயமும் அருளிச் செய்வதாக அமைந்தது,

௩௩. பெற்றசிற் றின்பமே பேரின்ப மாமங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் றுந்தீபற.

எனவரும் திருவுந்தியாராகும்.