பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இது சிவஞானிகளுக்கு உலகியலிற்பெறும் சிற்றின்பமே பேரின்பமாம் முறைமையினை யுணர்த்துகின்றது.

(இ-ள்) திருவருளைப் பெற்றகாலத்து ஆன்மா மெய்ப் பொருளையே நோக்கி நிற்றலால் அவ்விடத்துண்டாகிய சிற்றின்பமும் சிவாநுபவமாகிய பேரின்பமாக வந்து முடியும். அந்நிலையில் ஆன்மா சிவத்துடன் ஒன்றித் தற்போதம் அற நிற்றலால் அவ்வான்மாவுக்கு உடல் கருவி உலகு நுகர்பொருள்களாகிய மாயைப் பிணிப்பு ஒருகாலத்தும் வந்து முளைத்தல் இல்லை எ-று.

குருவின் அருளாலே மெய்ப்பொருளையுணர்ந்த காலத்தும் எடுத்த இவ்வுடம்பினால் முகந்துகொள்ளப் பட்ட பிராரத்தவினை நுகர்ந்தே கழிக்கவேண்டுதலின் அந்தப் பிராரத்தவினை காரணமாகச் சுக துக்கங்களாகிய வினைப்பயன் ஆன்மாவைச் சார்தல் இயல்பு. அந்நிலையிற் சிவஞானிகள் உலகப்பொருள்களிற் கருத்தைச் செலுத்தாது உயிர்க்குயிராகிய இறைவனையே சார்ந்து நிற்றலின் இறைவனும் இவர்களுடைய வினைப்பயன்களைத் தானே ஏன்று கொள்வனாதலால் இவ்வடியார்களுடைய கருவிகரணங்களெல்லாம் சிவகரணங்களாக அமைய அந்நிலையில் அவர்கள் பெற்ற சிற்றின்பமும் பேரின்பமாக வந்து முடியும் என்பதாம்.

"சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோட் டடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே"

(7-45-4)

எனவரும் நம்பியாரூரர் அருளிச் செயலும்,

தென்னாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின்னாருங் கொடி மருங்குற் பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்.

(பெரியதடுத், 181)

எனவரும் சேக்கிழார் நாயனார் வாய்மொழியும்

உலகப்பொருள்களைப் பாராது சிவபரம்பொருளையே நோக்கிய செம்புலச் செல்வர்களுடைய கருவிகரணங்கள் சிவகரணங்களாகித் தூய்மையுற்ற நிலையில், அவர்கள் இவ்வுலகில் துய்த்த சிற்றின்பமும் பேரின்பமாக நிறைவுபெற்ற தன்மைக்குச் சிறந்த இலக்கியமாகத் திகழ்தல் காணலாம்.

இத்திருவுந்தியார் பாடற்பொருளை விளக்கும் முறையில் அமைந்தது,


76. உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் தாக்கில்-தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை
இளைப்பதுமொன் றில்லை யிவர்.