பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


தனது பேரின்ப வளம் அனைத்துக்கும் முற்றுரிமையுடைய அருட்சத்தியுடன் பிரிவின்றி ஒப்பற்ற பேரின்பவுருவினனாகத் திகழ்தல் இறைவனது இயல்பென்பார், ‘பேரின்பமான பிரமக்கிழத்தியுடன் ஓரின்பத்துள்ளான்’ என்றார். அத்தகைய முதல்வன், பொய்யாய செல்வத்தை மெய்யாகக் கருதிப் பாசப்பிணிப்புற்றுக் கிடந்த உன்னையும் தனது பெருங் கருணைத் திறத்தால் எளிவந்து ஆட்கொண்டு உலகில் யாவரும் பெற்றறியாத பேரின்பத்துள் வைத்தருளினான் எனத் தம் நெஞ்சத்துக்கு அறிவுறுத்துவார், “உன்னையே ஆண்டான்” என்றார். “உன்னையே” என்புழி ஏகாரம் “உன்னையும்” என இழிவு சிறப்பும்மையின் பொருள்பட நின்றது,

“சிவன் எம்பிரான் என்னையாண்டு கொண்டான்
என்சிறுமை கண்டும்”

(திருவாசகம்-திருச்சதகம்-9)

எனவும்

“நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்”

(திருவாசகம்-திருக்கோத்தும்பி-15)

எனவும்,

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழாம் அடியேனை-யாவரும்
பெற்றறியா வின்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை.

(திருவாசகம்-திருவெண்பா-8)

எனவும் வரும் திருவாதவூரடிகள் அருளநுபவ மொழிகள் இத்திருப்பாடற் பொருளுடன் ஒப்பு நோக்கி யுணரத்தக்கனவாகும்,

"பேரின்பமான’’ என்னும் பெயரெச்சம், பிரமம் என்னும் பெயர் கொண்டு முடிந்தது. பிரமக் கிழத்தி என்றது, பிரமப் பொருளாகிய கிழவனுக்கு (நாயகனுக்கு) உரிய தேவியாய் அவனோடு பிரிப்பின்றி விளங்கும் பராசத்தியை. “கிழத்தியோடு ஓரின்பத்துள்ளான்” என்றது, "நந்தம்மையாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்’' என்னும் திருவெம்பாவைத் தொடரை அடியொற்றியமைந்ததாகும்.

சிவபரம்பொருளாகிய முதல்வன், தன்னடைந்தார்க்கின்பங்கள் தந்தருளும் முறையில் ஒப்பற்ற இன்பமே தனது திருமேனியாகக் கொண்டுள்ளான் என்பார், “ஓரின்பத்து உள்ளான்” என்றார்.

“தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானை”

(2–40–11)