பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


சிவகரணங்களாக மாற உயிரின் செயலை மாற்றி அவ்வுயிரின்பால் தன்செயலே விளங்க அவ்வுயிர்தானேயாய் ஒட்டிநிற்றலும் ஆகிய இந்நிலையினைப் புலப்படுத்துவது, ‘பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போல’ எனவரும் இவ்வுவமையாகும். இங்ஙனம் தம்மை மறந்து இறைவனைச் சிந்தித்துப் போற்றும் நற்பேறுடையவர்களே முதல்வனை உள்ளவாறு கண்டு பேரின்பம் நுகர்பவராவர்; இவ்வாறு கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய திருவருள்ஞானம் வாய்க்கப் பெறாதவர்கள் பிறவிக்குருடரைப் போன்று ஒன்றும் உணராதவர்களே என்பார்: 'கண்டாரே கண்டாரென் றுந்தீபற, காணாதார் காணாரென் றுந்தீபற’’ என்றருளிச் செய்தார்.

“பிடி” என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய்ப் பேயாற் பிடியுண்டவர்களை யுணர்த்தி நின்றது. இப்பாடலிற் "பெண்டிர்' என்றது உயிர்த் தொகுதியினை, "ஆண்மக்கள்’’ என்றது, எவ்வுயிர்க்கும் இன்பம் அளித்தலால் சங்கரன் எனப்போற்றப் பெறும் ஆன்மநாயகனாகிய சிவனை. அன்புடைய அடியார்கள் பேயாற் பிடியுண்ட பெண்டிரைப் போன்று தம்செயலற்று இறைவன் செயலே தம்கண் விளங்க இறைவனோடு ஒட்டிய பண்பினராகவும், அவர்களை ஆட்கொண்டருளிய இறைவன் தன் திருவருட்பண்பும் செயல்களும் அவர்கள்பால் விளங்கித் தோன்ற ஒட்டி வாழ்பவனாகவும் இவ்வாறுணர்ந்து தம்மை மறந்து தம்பிரானைக் கண்டின்புறும் இயல்புடையவர்களே மேற்கூறிய சத்தி சிவங்களின் தன்மையினை உள்ளவாறு கண்டவர்கள்: பேயும் பேயாற் பிடியுண்டவரும் போல ஒன்றுபட்டு நின்று முதல்வனையும் தம்மையும் கண்டு ஏகனாகி இறைபணி நிற்கும் இயல்பினைப் பெறாதவர்கள் “சத்தியாய்ச் சிவமாய்த் தனிப்பர முத்தி யான” முழுமுதற் பொருளின் ஒருமையின் இருமையினை உள்ளவாறு உணரப் பெறுவாரல்லர் என்பதாம்.

“பேரின்பமான” “பெண்டிர்பிடிபோல” எனவரும் இத்திருவுந்தியார் பாடல்கள் இரண்டின் பொருள்களையும் ஒருங்கே தொடர்பு படுத்தி விளக்கும் முறையில் அமைந்தன, 77 முதல் 79 வரையுள்ள திருக்களிற்றுப்படியார் செய்யுட்களாகும்.


77. பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத் துள்ளானை யுள்ளபடி-பேரின்பங்
கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம்
உண்டவரே யுண்டார் சுவை.

(இ-ள்) அளவிடப்படாத பேரானந்தமான பெரும் பொருளுக்கு உரிமையுடையவளாகிய பராசத்தியுடன் ஒப்பற்ற இன்பமே வடிவ