பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

123


மாகத் திகழும் சிவபெருமானைப் பிரிவறக் கலந்து அம்முதல்வனது அருளாரின்பத்தை உள்ளவாறு நுகரப் பெற்றவர்களே பேரின்பத் தியல்பினை உள்ளவாறு உணரப் பெற்றவராவர். கடலிற் பிறந்த இனிய அமுதத்தை நுகர்ந்து அதன் சுவையில் அழுந்தினவர்களே அவ்வமுதத்தை உள்ளவாறு நுகர்ந்தோராவர் எ-று,

கடலிற் பிறந்த இனிய அமுதத்தினை நுகர்ந்து அதன் சுவையில் உள்ளபடி ஆழ்ந்தவர்களே அதன் பயனான இறவாமையைப் பெற்று இன்புறுவதல்லது, ஏனையோர்க்கு அவ்வமுதத்தைக் கண்ணாற் கண்ட மாத்திரத்தில் அதன் சுவையும் தெரியாது; இறவாமையாகிய பேறுங் கிட்டாது. அதுபோல, ஆன்மாக்கள் மலமாயை கன்மங்களை நீங்கி ஞானத்தை யடைந்தாலும் அந்நெறியே சிவனைக்கூடி அம்முதல்வனது பேரானந்தத்துப் பிரியாதிருக்கப் பெற்றாலல்லது ஞானத்தைப் பெற்ற மாத்திரத்திலேயே சிவனோடு இரண்டறக் கலந்து இன்புறுதலாகிய வீடுபேறு கிட்டாது என்பதாம்.

இதன் கண், பேரின்பமான பிரமக்கிழத்தியுடன் ஓரின்பத்துள்ளான் என்றதொடர், திருவுந்தியாரின் ௩௪-ஆம் பாடற் பொருளையும், “பேரின்பங் கண்டவரே கண்டார்” என்ற தொடர் “பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய் போலக் கண்டாரே கண்டார்” என்னும் ௩௫-ஆம் பாடற் பொருளையும் அடியொற்றி யமைந்துள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.


78. நங்கையினால் நாமனைத்துஞ் செய்தாற்போ னாடனைத்தும் நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும்-நங்கையினும்
நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிதுகாண்
எம்பெருமா னார்தம் இயல்பு.

இஃது, ஒருவன். என்னும் ஒருவனாகிய முதல்வனைப் “பிரமக் கிழத்தியோடு ஓரின்பத்துள்ளான்” என இருமைப்படக் கூறியது என்ன? என வினவிய மாணாக்கனை நோக்கிப் பிரமக்கிழத்தியும் அவளோடு பிரிவறத் திகழும் முதல்வனும் ஒருபொருளே யென்பதனை வற்புறுத்துகின்றது.

(இ-ள்) உயிர்களாகிய நாம் எண்ணிய செயல்கள் அனைத்தையும் நம்முடைய கை முதலிய அவயவங்களாற் செய்து நிறைவேற்றுதல் போலவே, உயிர்க்குயிராகிய இறைவனும் தன்னுடன் பிரிப்பின்றியுள்ள திருவருட் சத்தியாகிய நங்கையைக் கொண்டே உலகங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்தருள் புரிவான். இவ்வாறு எல்லா