பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஒருமை நிலையில் வைத்துணரின், தூயவுணர்வு நிலைகள் ஐந்தனுள் நாலாவதாகிய நின்மல துரியம் என்னும் திருவருள்நிலை தானே வந்தெய்தும். நாத தத்துவவுருவினனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கத் தக்க இடமும் அம்முதல்வனை ஆன்மா கூடுதற்குரிய இடமும் அதுவேயாகும். எ-று.

நாலாய பூதம் என்றது, ஐம்பெரும் பூதங்களுள் ஒடுக்க முறையில் நாலாவதாக வைத்து எண்ணப் பெறும் காற்றினை; இங்கு அத் தொடர் பிராணவாயுவெனப்படும் உயிர்வளியினையுணர்த்தி நின்றது. நாதம் என்றது, மூலாதாரத்திலே பிரணவமாகப் பதிந்துள்ள சூக்குமை வாக்காகிய நாதத்தினை. நாலாம்பூதமாகிய உயிர்வளியும் நாதமும் சேர்ந்து ஒன்றுமிடம் பிரமரந்திரம் என்னும் உச்சிப் பெருவெளியென்பர் உணர்ந்தோர். நாதவுருவினனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் மேலாகிய இடமும், அம்முதல்வனை ஆன்மா கூடுதற்குரிய இடமும் அதுவேயாகும். “மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்” எனவும், “கழிப்பாலை மேய கபாலப்பனார்" எனவும், “எமது உச்சியாரே” எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு நினைத்தற்குரியனவாகும். -

“சுக்கில சுரோணிதத்தின் தலையிலே சீவன் பதிகின்ற அளவில் சிவனுடைய கிரியாசத்தியாலே நாலாம் பூதமாகிய வாயுவும் சத்தப் பிரமமான நாதமும் கூடப்பதிந்து சரீரம் பரிணமிக்க, வாயுவானது நாடிகள்தோறும் பூரணமாகப் பிரதான வாயுவான பிராணவாயுவும் பின்பு மரணமுண்டாக்குதற் பொருட்டு நாபிச் சக்கரத்தின்கீழே சென்று பொருந்தாநிற்கும். சத்தப் பிரமமான நாதம் தானந்தோறும் நிற்கும் எழுத்துக்களாகிச் சென்று பின்பு மரணமுண்டாக்குகை காரணமாக மூலாதாரத்திலே பிரணவமாகப் பதிந்து கிடவாநிற்கும். இவற்றைத் தேசிகனருளாலேயறிந்து சத்திபீசத்தையும் சிவபீசத்தையும் கொடுத்துத் திருமந்திரப் பிராசாதமாக்கி மனத்தை ஒருமைப்படுத்தி இந்தத் திருமந்திரப் பிராசாதத்தைக் கொண்டே நாதத்தையெழுப்பி இந்த நாதத்தையும் பிராணவாயுவையுங்கூட்டிச் சுழுமுனை வழியே செலுத்தி முன்பு தோன்றின பிரமரந்திரத்திலே கூடித் தான் பரமாகாசத்தில் அழுந்தில், நாலாம் நிலையாகிய சாயுச்சியம் அப்பொழுதே கைகூடும்; கர்த்தா எழுந்தருளியிருக்கத்தக்க இடமும் அதுவே.”

என இத்திருவுந்தியாரின் பொருளைத் தாம் பெற்ற சிவயோக அனுபவத்தின்படி தில்லைச்சிற்றம்பலவர் விரித்துக் கூறியுள்ளார். அவர் கருத்துப்படி இத்திருப்பாடலில் நாலாம்நிலை யென்றது, உயிர்கள் பெறுதற்குரிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் நால்வகைப் பேறுகளுள் நாலாம்நிலையினதாகிய பரமுத்தியையெனக் கொள்ளவேண்டியுள்ளது.