பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

127


பீசம்-வித்தெழுத்து. சத்தி பீசம் என்றது திருவைந்தெழுத்தில் திருவருளைக் குறிக்கும் “வ” எனவும், சிவபீசம் என்றது இறைவனைக் குறிக்கும் “சி” எனவும் கொண்டு வசி, சிவ என்னும் மந்திரத்தால் நாதத்தையும் பிராணவாயுவையும் சேர்த்துச் சுழுமுனை நாடி வழியே செலுத்திப் பிரமரந்திரம் என்னும் உச்சிப் பெருவெளியிலே அழுந்தும் சிவயோக நிலை கைவரப் பெற்றால் நாலாம் நிலையாகிய சாயுச்சியம் அப்பொழுதே வந்தெய்தும் என விளக்கங் கூறுவாருமுளர்.

இங்ஙனம் இத்திருவுந்தியார் பாடலிலுள்ள நாலாம்நிலை என்பதற்குச் சாயுச்சியம் எனப் பொருள் வரைந்த இவ்வாசிரியரே இத்திருவுந்தியார் பாடலை யடியொற்றியமைத்த “தாரத்தோடொன்றாவர்” என்னும் திருக்களிற்றுப்படியார் பாடலில் “நாற்றானத்தேயிருப்பர்” என்னுந் தொடருக்கு “நாலாந்தானமான திரோதான சத்தியிலே இராநிற்பர்” என உரை வரைந்துள்ளார். திருவுந்தியார் பாடலில் “நாலாம் நிலை” என்றதும் திருக்களிற்றுப்படியாரில் “நாற்றானம்” என்றதும் ஒன்றேயாகவும், இவ்விரண்டற்கும் இவ்வாறு வெவ்வேறு பொருள் வரைதல் பருந்தும் நிழலும் என அமைந்த திருவுந்தியார்க்கும் திருக்களிற்றுப்படியார்க்கும் உள்ள தொடர்பினை மறக்கச் செய்வதாகும்.

“நாலாம் பூதமாகிய வாயுவையும் நாதமாகிய சத்தப் பிரமத்தையும் ஆசாரியர் உபதேசித்த முறையேயறிந்திடில் நாலாம் நிலையாகிய திருவருள் கைகூடும். சிவன் இருத்தற்கிடம் அந்தத் திருவருளே. யோகப் பயிற்சி வேண்டுமென்பது கருத்து” எனப் பழைய உரையாசிரியர் இப்பாடற் பொருளைச் சுருக்கமாக விளக்கியுள்ளார்; இவ்வுரையாசிரியர் இதனையடி யொற்றியமைந்த “தாரத்தோ டொன்றாவர்” என்ற பாடலில் “நாற்றானத்தேயிருப்பர்” என்ற தொடருக்குத் தில்லைச்சிற்றம்பலவர் கொண்டவுரை தமக்குப் பொருத்தமின்மையையுணர்ந்து, “நற்றானத்தேயிருப்பர்” எனப்பாடங் கொண்டு நல்லதானமாகிய ஆன்மாவினிடத்திலே கூடி நிற்பான் என உரைவரைந்துள்ளமையும் இங்கு நினைத்தற்குரியதாகும்.

“நாலாம் நிலை” என்பதற்கு “நாலாம் நிலையாகிய திருவருள்” என இவ்வுரையாசிரியர் இருவரும் கூறிய உரையினையாதாரமாகக் கொண்டு நின்மலதுரியமாகிய நாலாம் அவத்தை நிலையாகிய திருவருளை எளிதிற்பெறலாம்” எனப் பின்வந்தோரொருவர் எழுதிய உரைக்குறிப்பும் இங்கு நோக்கற்பாலதாகும்.

சிவயோக நெறியில் நிற்போர் பிராணவாயுவைப் புறத்தே போகாமல் ஒடுக்கி இறைவனது திருவருள் ஞானமாகிய விளக்கினை உள்ளே ஏற்றி நன்புலன் ஒன்றிப் புறத்தே செல்லும் இடைபிங்கலை