பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


அகத்தே வைத்து வழிபாடு செய்யும்போது அவர்களது உந்தித் தாமரை ஓமத்தானமாகவும் நெஞ்சத்தாமரை பூசைத்தானமாகவும், நெற்றிக்கமலம் தியானத்தானமாகவும் அமைய, அகப்பூசையினை முறைப்படி செய்து இம்மூன்றிற்கும் மேலாய் மீதானம் எனப்படும் தலையின் உச்சியாகிய பிரமரந்திரப் பெருவெளியிலே தம் உயிரைச் செலுத்திக் கலந்து இன்புறும் நிலையில் அங்கு ஆயிர இதழ்த் தாமரையிலே அம்மையப்பராக வீற்றிருந்தருள்வர் என்பார், “தாரத்தின் நாற்றானத்தேயிருப்பர்” என்றார். உடம்பினகத்தே இறைவனை வழிபாடு செய்தற்குரிய ஓமத்தானம் பூசைத்தானம் தியானத்தானம் எனப்படும் மூன்று மண்டலங்களையுங் கடந்து மேற்பட்டு விளங்குவது, சிவயோகிகள் அந்திவட்டத் தொளியான் அடிசேர்தற்குரிய மீதானமாகிய பிரமரந்திரம் எனப்படும் உச்சிப் பெருவெளியாதலின், அது நாற்றானம் என்னும் பெயர்த்தாயிற்று. இப்பெயர் வழக்கம்,

‘நாற்றானத் தொருவனை நானாய பரனை’ (7-38-4)

எனச் சிறந்த சிவயோகியாராகிய நம்பியாரூரர் வாய்மொழியில் இடம் பெற்றுள்ளமையும் ‘நாலா நிலத்தின் நடுவான அப்பொருள்’, (திருமந்திரம்-840) எனத் திருமூலநாயனார் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கி யுணரத் தகுவனவாகும். ஞானத்தால் தொழும் சிவஞானிகளுக்கு ஈறிலாப் பேரின்பமாகிய வீடுபேற்றினை அருளுதல் வேண்டி வேதத்தின் முடிந்த பொருளாகிய பராசத்தியிலே இருப்பர் என்பார், "வேத அந்தத்தே இருப்பர்’’ என்றார். இவ்வாறு சிவபெருமான் தன்னிற் பிரிவிலாச் சத்தியுடன் கூடி உலகுயிர்கள் எல்லாமாய்க் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றித் தான் வேறாய்ச் சிவம் எனத் தன்னியல்பிலே தனித்து நிற்கும் இயல்பினர் என்னும் உண்மையினைப் புலப்படுத்துவார் “வேறு” எனப் பிரித்துக் கூறினர். வேறு இருத்தலாவது, தத்துவங்களையெல்லாங் கடந்து அப்பாலைக்கு அப்பாலாய்த் தனித்து நிற்றல்.

சிவபெருமானும் அம்முதல்வனது பிரிவிலா ஆற்றலாகிய சிவசத்தியும் பொருளால் ஒன்றேயாயினும் எவ்வகைப் பொருளினுந் தோய்வின்றித் தானே திகழொளியாய் நிற்குந் தன் உண்மைநிலையிற் சிவம் எனவும், “உலகெலாமாகி வேறாய் உடனுமாய்” இவ்வாறு உயிர்களின் வழி நிற்குந் தன்மையிற் சத்தியெனவும் பெயர்பெற்று “அம்மை யோடப்பனாகி நிற்பன்” என்பதனை விளக்கும் முறையில் அமைந்தது இத்திருக்களிற்றுப்படியார் திருப்பாடலாகும்.


௩எ. சென்ற நெறியெல்லாம் செந்நெறி யாம்படி
நின்ற பரிசறிந் துந்தீபற
நீசெயல் செய்யாதே யுந்தீபற.