பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

131


இது, தற்போதம் கெடத் திருவருள்வழி யொழுகின் எல்லாநெறிகளும் நன்னெறியேயாம் என்கின்றது.

(இ-ள்) உலகமக்கள் தத்தம் வினைக்கீடாகச் சென்ற வழிகள் எல்லாம் செவ்விய நன்னெறிகளாக அமையும்படி உயிர்களின் அகத்தும் புறத்தும் முதல்வன் நின்று அருள்புரியும் திருவருள் திறத்தினை அறிந்து தெளிக. நீயாக எதனையும் தன்முனைப்பினாற் செய்தலைத் தவிர்வாயாக எ-று.

இத்திருவுந்தியாரில் “நெறி” யென்றது, உலகமக்கள் தத்தம் வாழ்க்கையில் மேற்கொண்டொழுகுகின்ற பல்வேறு சமயங்களை. சென்ற நெறியெல்லாம் செந்நெறியாம்படி நின்ற பரிசு என்றது, உலகில் மக்கள் கடைப்பிடித்தொழுகுகின்ற எல்லாச் சமயநெறிகளும் ஏணிப்படிகளாக அமைய, இவையனைத்தும் முடிவில் தன்கண் வந்து சேரும்படி எல்லோரையும் செந்நெறியாகிய சிவநெறிக்கேயுரியராகத் திருத்திப் பணிகொண்டு அருள்புரிய வல்ல இறைவன் தானொருவனே யென்னும்படி எச்சமயத்தார்க்கும் எவ்வுயிர்க்கும் ஒப்ப அருள் சுரக்கும் முதல்வனது பொதுமை நிலையினை.

“ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந்தகையன
தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந்தகையன
இன்னம்பரான்றன் இணையடியே (4-100-7)

எனவரும் அப்பரடிகள் அருள்மொழி இறைவனது இப்பொதுமை நிலையினை இனிது புலப்படுத்தல் அறிக. நின்ற பரிசு அறிதலாவது, "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு இங்கே யென்றருள் புரியும் எம்பெருமான்” (2-49-6) எனவும், "பாராழி வட்டத்தார் பரவியிட்ட பன்மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும்’’ (6-18-6) எனவும், “ஆரொருவ ருள்குவா ருள்ளத்துள்ளே யவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்” (6-18-11) எனவும் அருளாசிரியர்கள் அறிவுறுத்திய வண்ணம் அறிந்து தெளிதல். "நீ செயல் செய்யாதே'’ என்றது, இவ்வாறு எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான் (1-4-10) ஆகிய இறைவனது திருக்குறிப்புக்கு மாறாக நினது தற்போதத்தால் சில செயல்களைச் செய்யத் தொடங்கிப் பழிக்கு ஆளாகாதே என அறிவுறுத்தியவாறு.

“மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச்
சினமுத லகற்றி வாழுஞ் செயலற மானால் யார்க்கும்
முனமொரு தெய்வம் வந்து செயற்கு முன்னிலையாமன்றே"

(சிவஞானசித்தியார்)