பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


எனவரும் அருணந்திசிவனார் அறிவுரை எத்திறத்தார்க்கும் புகலிடமாய் நின்ற இனறவனது பொதுமை நிலையினை நன்கு புலப்படுத்தல் அறிந்து போற்றற் பாலதாகும்.

இத்திருவுந்தியார் பாடற்பொருளை யுளங்கொண்டு விளக்கும் முறையில் அமைந்தன திருக்களிற்றுப்படியாரிலுள்ள பின்வரும் பாடல் களாகும்.


81. ஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்கள் ஒன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க
என்னா லியன்றிடுமோ என்போல்வா ரேதேனுஞ்
சொன்னற்றா னேறுமோ சொல்.

இஃது இறைவனது இயல்பு சிற்றறிவினராகிய உயிர்களால் நூலுணர்வினால் உணர்ந்துரைக்கும் எளிமையுடையதன்று என்கின்றது.

(இ-ள்) ஒரு நூல் கூறியதனை மற்ருெரு நூல் உடன்பட்டுரையாத நிலையில் வேறுபட்டுள்ள பலவகைச் சமயநூல்களெல்லாம் தம்முள் ஒருங்கு வைத்து ஆராய்ந்து இதுதான் இறைவனது உண்மையியல்பு என்று துணிந்துரைக்க இயலாதனவாய் முரண்பட்டுள்ளன. இந்நிலையில் அம்முதல்வனது இயல்பு இத்தகையது என என்னைப் போன்ற ஒருவனால் மட்டுந் துணிந்து கூற இயலுமோ? என்னைப்போல்வார் சிலர் கருத்தொருமித்து ஏதேனும் கூறினாலும் அம்மொழி உலக ஆரவாரத்தில் அழுந்திய மாந்தர் செவி வாயிலாகச் சென்று அவர்தம் சிந்தையில் ஏறி இடம்பெற வல்லதோ? சொல்வாயாக எ-று.

இறுதியிலுள்ள சொல் என்பதனைச் “சொல்” ஏறுமோ முன்னுங்கூட்டுக,

இறைவனது உண்மையினை உள்ளவாறு அறிவுறுத்தும் திறனும் அதனைக் கேட்டுணரும் பக்குவ நிலையும் இறைவன் திருவருளாலன்றி நம்மனோர்க்கு வாய்த்தல் இல்லையாதலால் நாம் மேற்கொண்ட சமய நெறிகள் எல்லாம் சிவமே பெறுந் திருநெறியாகத் திருத்தியருள்புரிய வல்லவன் இறைவன் ஒருவனே யென்பது இத்திருப்பாடலாற் போந்த பொருளாகும்.

நூலுணர்வுணரா நுண்ணியனாகிய இறைவனது இயல்பு இதுதான் எனச் சாத்திரங்கள் பலவற்றாலும் உறுதிப்பட உரைகளால் விரித்துரைக்கும் எளிமையுடையதன்று. அம்முதல்வனது திருவருள் வழி நின்ற