பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஒன்றில் நின்று உனக்கு அருள் சுரப்பதுடன் இம்மூவகையும் ஒருங்கமைய உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இங்ஙனம் இரண்டறக் கலந்து விளங்கும் இயல்பினையுடையான் அவ்விறைவன் என்னும் அத்துவித வுண்மை பின்பு உனக்கு நன்கு புலனாகும் என்பார் “பின்” என்றார். “பின்” என்பது எச்சமாய் நின்று “பின் உனக்கு எல்லாம் விளங்கும்” என்னும் பொருளைத் தந்து நின்றது.

பேதமாவது, பொருள்களைத் தனித்தனியே பிரித்தற்குரிய வேறுபட்ட இயல்பினதாதல். அபேதமாவது அவையனைத்தும் தன் தன்மையாகிய இலக்கணத்தால் ஒன்றேயெனக் கொள்ளுதற்குரிய ஒற்றுமைப் பண்பினதாதல். பேதாபேதமாவது, ஒருவாற்றால் வேறுபடுதலும் ஒருவாற்றால் ஒன்றாதலுமாகிய இருவேறு தன்மைகளை ஒருங்குடையதாதல். கடவுளும், அவன் அவள் அதுவெனும் உலகத்தொகுதியும் இருவேறு தனிப்பொருள்கள் என்பர் பேதவாதிகள்; பொன்னும் அதனாலியன்ற அணிகலனும் போன்று “ஒருபொருளே” யென்பர் அபேதவாதிகள்; ஒருவர் ஒருசொல்லைச் சொன்ன நிலையில் அச்சொல்லே பொருளாக ஒன்றுபட்டுத் தோன்றியும், அப்பொருளைக் கண்ட நிலையில் அச்சொல்லே வேறாகப் பிரிந்துநின்றும் இவ்வாறு சொல்லும் பொருளும் ஒன்றாயும் வேறாயும் இருந்தாற்போன்று, இறைவனும் உலகுயிர்த்தொகுதியும் தம்முள் ஒன்றாயும் வேறாகியும் நிற்கும் என்பர் பேதாபேதவாதிகள். இங்குக் கூறப்பட்ட பேதம் அபேதம் பேதாபேதம் என்னும் மூவகைக் கொள்கைகளையும் வற்புறுத்தும் நிலையில் அவர்களால் எடுத்துக்காட்டப் பெற்ற உவமைகள் இறைவனியல்பினை உள்ளவாறு புலப்படுத்தவல்லன அல்ல எனவுணர்ந்த சைவசித்தாந்தச் சான்றோர்கள் இம்மூவகை நிலைகளையும் ஒருங்குடைமையே இறைவனது இயல்பென்பதனை விளக்க இம்மூவகை நிலைகளுக்கும் பொருந்தத் தத்க உவமை காட்டி விளக்கந் தந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும்.

இறைவன் உடலும் உயிரும்போல் உலகெலாமாகி நிற்றலால் ஒன்றாகியும், கண்ணொளியும் கதிரொளியும் போல் பொருட்டன்மையால் வேறுபட்டு விளக்கந் தருதலின் அவற்றின் வேறாகியும், கண் ஒன்றைக் காணும் நிலையில் உயிர் அதனொளியுடன் கலந்து நின்று காணுமாறு போல, உயிர்கள் பொருள்களையறியும் நிலையில் இறைவன் உயிர்க்குயிராய் உடனிருந்து அறிந்து உதவி செய்தலால் உடனாகியும் இவ்வாறு மூவகை நிலையும் பொருந்த ஒன்றாய் வேறாய் உடனாய்ப் பொருள்கள் தோறும் கலந்து நின்று அருள்புரியும் அத்துவித நிலையினன் என்பது, சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் இறைவனது இயல்பாகும்.