பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

135


88 நின்றபடி நின்றவர்கட் கன்றி நிறந்தெரியான்
மன்றினுணின் றாடல் மகிழ்ந்தானும் - சென்றுடனே
யெண்ணுறுமைம் பூதமுத லெட்டுருவாய் நின்றானும்
பெண்ணுறநின் றாடும் பிரான்.

இது “நின்ற பரிசறிந் துந்தீபற” என்னுந் தொடர்ப்பொருளை விளக்குகின்றது.

(இ-ள்) (உலகமெலாம் ஒடுங்கும் ஊழிக் காலத்திலே) தனது சத்தியும் தன்னுள் அடங்கி மறைய ஒருவனாய் நின்று ஆடுபவனும், (படைப்புக் காலத்திலே) ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறு திங்களும் ஆன்மாவும் என எண்பேருருவினனாகி உலகெலாமாகி நிற்பவனும், (உலகெலாம் நிலைபெறச் செய்து காத்தருளும் இக்காலத்திலே} தில்லைத் திருவம்பலத்திலே அற்புதத் தனிக் கூத்தினை ஆடியருள்கின்றவனும் ஆகிய சிவபெருமான், தன்னுடைய தன்மை புலனாகாது ஆன்மாவாய் நின்ற முறைமைபோலத் தம்முடைய உயிரறிவு தோன்றாதபடி தன்செயலற அம்முதல்வனோடு ஒற்றுமைப்பட்டு அவனது அருள்வழியடங்கி நிற்பார்க்கன்றி அம்முதல்வன் ஏனையோரால் இன்னதன்மையன் எனத் தெரிந்துணர வொண்ணான் எ-று.

பெண்ணுறநின்றாடும் பிரான், எட்டுருவாய் நின்றானும், மன்றினுள் நின்றாடல் மகிழ்ந்தானும் நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம் தெரியான் என இயைத்துப் பொருள் கொள்க. பெண் உற நின்று ஆடுதல் என்பது, இறைவன் ஊழி முடிவில் தனது ஒரு கூற்றினளாகிய உமையம்மையும் தன்னுள் மறைந்தொடுங்கத் தான் ஒருவனாகவே நின்று ஆடும் ஊழிப்பெருங்கூத்து. இங்ஙனம், ஊழி முடிவில் உமையம்மையையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இறைவன் தான் ஒருவனாகவே நின்றாடுமியல்பினை,

“பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்’

எனவரும் புறநானுற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடல் தொடரும்,

"ஒருகாலத்து ஒன்றாகி நின்றார்போலும்
ஊழிதோறூழி படைத்தார் போலும்”

எனவரும் திருத்தாண்டகமும் இனிது புலப்படுத்துதல் காணலாம்;

நின்றபடி நிற்றலாவது, உயிரறிவாலும் நூலுணர்வாலும் உணரப்படாத இறைவன் உயிர்களோடு உடனாய் நின்று அறிவித்தும்