பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


அறிந்தும் இருவகை உதவிகளைப் புரிந்தருளும் நிலையிலும், யானே அறிந்தேன் என உயிர்கள் கருதும்படி தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது உயிரின் வழி நின்றாற் போன்று, உயிரும் அம்முதல்வனோடு உடனாய் நின்று அறிந்தாலும் 'நான் அறிந்தேன்' என்னும் தற்போதம் தோன்றாது இறைவனது அருள்வழியடங்கி நிற்றலாகும். 'நின்றபடி நிற்றல்' என்னும் இத்தொடர்ப் பொருளை “அவனே தானேயாகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்க” என மெய்கண்டார் விளக்கியருளிய திறம் இங்கு உளங்கொளத்தகுவதாகும், நிறம்-இயல்பு, தன்மை. “நிறந் தெரியா” எனப் பாடங்கொண்டு, “சிவனுடைய உண்மை தெரியாது’’ எனப் பொருள் உரைப்பர் தில்லைச் சிற்றம்பலவர்.

“இன்னவுரு இன்ன நிறம் என்றறிவதேல் அரிது” (3-71-4)

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

இறைவன் எண் பேருருவினனாகத் திகழும் நிலை படைத்தற்றொழிலையும், மன்றினுள் நின்றாடல் காத்தற்றொழிலையும், பெண்ணுற நின்றாடல் அழித்தற்றொழிலையும் குறித்து நின்றன.


௩அ. பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீயறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ண முந்தீபற.

இது, குருவருளாலே பெற்ற திருவருளை மீண்டும் பிறப்பிறப்புக்களிற் புக்குழலும் வீண்முயற்சிகளிலே பயன்படுத்தாமல் இறைவன் திருவடிகளை யடைந்தின்புறும் நன்னெறிக்கே துணையாகக் கொள்க என்று அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) பொன்னினால் இயன்ற கொழு என்னும் உழுபடையினைக் கொண்டு வரகினை விளைத்தற் பொருட்டு வன்னிலத்தை யுழுவதனால் வரும் பயன் யாது? அத்தகைய பொன்னினாலியன்ற கொழுவினையொத்த திருவருளின் சிறப்பினை நன்குணர்ந்து அதனைப் பெரும் பொருளாகிய சிவவிளைவினை யடைதற்கே சாதனமாகக் கொள்வாயாக. உனக்குத் துணைபுரியவந்த திருவருளின் பெருமையறிந்து உனது உயிரறிவு முனைத்துத் தோன்றாதபடி அத் திருவருளின்வழி யடங்கி நிற்பாயாக எ-று.

பொன்னால் இயன்ற கொழுவினைப் பெற்றோன் அதனை நன்செய் நிலத்தினை உழுதற்குத் தொடங்குதலாகிய வழிபாட்டளவுக்குத் துணையென மதித்துப் போற்றுதலை விடுத்து, அதன் மதிப்புணராமல்