பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

137


வரகினை விதைத்தற் பொருட்டமைந்த புன்செய்நிலத்தினை உழுதற்குரிய உழுபடையாகப் பயன்படுத்தினால் கொழுவுந் தேய்ந்து உழுதொழிலும் நிறைவேறாதவாறு போலக், குருவின் அருளாலே பெற்ற திருவருளைப் பெற்றதுகொண்டு பிழையேபெருக்கி அன்பினைச் சுருக்கிப் பிறப்பிறப்புக்களிற் போக்கு வரவு புரிதற்குக் காரணமான ஐம்புல நுகர்ச்சிகளிற் செலுத்தி அழுந்துவாயாயின், உனக்குக் கிடைத்த திருவருட் செல்வமும் நீங்க, அதனாற் பெறுதற்குரிய வீடு பேறாகிய பேரானந்த விளைவினையும் இழக்கின்றாய் என அறிவுறுத்துவார், “பொற்கொழுக்கொண்டு வரகுக்கு உழுவது என்?” என்றார். கொழு வென்பது உழவர்கள் நிலத்தை வுழுதற்பொருட்டுக் கலப்பையின் அடிமுனையிலே கீழே பொருத்தப் பெற்றிருக்கும் உழுபடை. வரகு என்பது புன்செய்நிலத்தில் விளைவித்தற்குரிய தானியம். இங்குப் “பொற்கொழு” என்றது. எளிதிற் கிடைத்தற்கரிய பெருமை வாய்ந்த திருவருளையும், வரகுக்கு உழுதல் என்றது. அத்திருவருளைச் சிவபோகமாகிய பெரும்பயனை விளைவித்தற்குரிய சாதனமாகக் கொள்ளாது ஐம்புல நுகர்ச்சியாகிய இழிந்த போகத்தைப்பெறுதற்பொருட்டு வீணே செலவிட முயன்று அதனை யிழந்துபோதலையும் குறித்து நின்றன. இச் செய்யுள் நுவலாநுவற்சி யென்னும் அணியமைந்ததாகும். உழுவது என்? என்புழி எவன் என்னும் வினாப் பெயர் என் என்றாகி இன்மைப்பொருள் குறித்து நின்றது; ஒரு பயனும் இல்லையென்பதாம். "அக்கொழு” என்றது, அத்தகைய அருமையுடைய திருவருளைச் சுட்டி நின்றது. அறிதலாவது, அதன் சிறப்பினை நன்கு மதித்து உயர்ந்த சிவபோக விளைவினைப் பெறுதற்குரிய சிறந்த சாதனமெனத் தெளிந்துணர்தல். “அறியாவண்ணம்” என்றது, தன்னறிவின் முனைப்பு தோன்றாவண்ணம் திருவருளின்வழி ஒத்து ஒழுகுந்திறத்தினை.

இனி "முத்திக்கு ஏதுவாகிய மனவாக்குக் காயங்களைக்கொண்டு விடயங்களுக்கு முயற்சி பண்ணுவது என்ன பயன்? அக் கொழுப் போன்ற மனவாக்குக் காயங்களினுடைய அருமையையறிந்து அவற்றாலே சரியை கிரியா யோகங்களைச் செய்து பின்பு திருவருளையறிந்து வேறொன்றையும் அறியாவண்ணம் நில்” -

என இத்திருப்பாட்டிற்குப் பொருள் உரைத்தலும் பொருத்தமுடையதே யாகும். இவ்வுரையில் 'நில்' என்னும் சொல் எச்ச மாக வருவித்துரைக்கப்பட்டது. இங்ஙனம் உரை வரைதற்கு ஆதாரமாகத் திகழ்வன,

“கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை” (திருக்குறள் -9)

எனவும்,

| 8