பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

141



அ௫. அதுவிது வென்றும் அவன்நானே யென்றும்
அதுநீயே யாகின்றா யென்றும்-அதுவானேன்
என்றும் தமையுணர்ந்தோ ரெல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்லுவரோ வுற்று.

இஃது 'ஆன்மா சிவமாகும்' என்பது கொண்டு, ஆன்மாவும் சிவமும் பொருளால் ஒன்றேயெனக் கொள்ளலாகாதோ? என வினவிய மாணாக்கற்கு ஆன்மாவும் சிவமும் பொருட்டன்மையால் வேறாகிய இருவேறு பொருள்களே என அறிவுறுத்துகின்றது:


{{gap}}(இ-ள்) பிரமப் பொருளாகிய அதுவென்றும் ஆன்மாவாகிய இது வென்றும், அவன் என்றும் நான் என்றும், அது நீயேயாகின்றாய் என்றும் அது நான் ஆனேன் என்றும் இவ்வாறு ஆன்மாவாகிய தம்மையும் பரம்பொருளாகிய இறைவனையும் உள்ளவாறுணரப்பெற்ற தவச்செல்வர்கள் எல்லோரும் தம்மையும் இறைவனையும் இவ்வாறு பொருட்டன்மையால் வேறாகிய இருபொருள்களாகக் கூறியிருக்கவும், அவ்வுண்மையை யறிந்தோர் அன்னோர் கூறிய பெரும்பொருட் கிளவிகட்கு மாறாக ஆன்மாவும் சிவமும் ஒருபொருளே என மனம்பொருந்திக் கூறுவரோ (கூறமாட்டார்கள்) எ-று.


தமையுணர்ந்தோரெல்லாம் அது இது என்றும் அவன் நானே யென்றும் அது நீயே யாகின்றாய் என்றும் அது ஆனேன் என்றும் (இவ்வாறு) இரண்டாகக் (கூறியிருக்கவும்) தமையுணர்ந்தோர் உற்று ஒன்றாகக் கூறுவரோ என வேண்டுஞ் சொற்களை எச்சமாக வருவித்துப் பொருள் கொள்க. உற்றுக் கூறுதலாவது, ஐயந்திரிபற மனம் பொருந்திக் கூறுதல். ஒகாரம் எதிர்மறை; கூறமாட்டார்கள் எனப்பொருள் தந்து நின்றது. தமையுணர்ந்தோர் என்றது, ஆன்மாக்களாகிய தம்மியல்பினையும் இறைவனது இயல்பினையும் உள்ளவாறு உணரப்பெற்ற செம்புலச் செல்வர்கள் என்றவாறு. தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்' என்றார் மெய்கண்டாரும்.


“ஆன்மாவும் சிவனும் எப்பொழுதும் இரண்டாயிருக்குமென்றும், சிவமென்று ஒரு முதல் இல்லை ஆன்மாத்தானே சிவமென்றும், சிவம் நீ என்று வேறில்லை உன்னுடைய உபாதிகள் நீங்கினபோது நீதானே சிவமாகின்றாய் என்றும், நான் சிவனுடனே கூடிச் சிவமாய் விட்டேன் என்றும், தம்மை உள்ளபடி அறிந்திருக்கிற சிவயோகிகள் இப்படியே பேதமாகவும், அபேதமாகவும் பேதாபேதமாகவும் சொல்வார்களோ? மாணவகனே என்க’’ என இப்பாட்டின் பொருளை விரித்துரைப்பர் தில்லைச் சிற்றம்பலவர். இதன் கண் “அதுவிது” என்றதனைப் பேதவாதி கூற்ருகவும், “அவன் நானே” என்றதனை