பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

143


"அது நீயேயாகின்றாய்” என்றும் “அது ஆனேன்’’ என்றும் ஒன்றாகவும் சொல்லுவரோ எனப் பொருள்கொள்ளுதற்கும் இடமுண்டு. இங்ஙனம் கொள்ளுங்கால்,

“அதுவிது வென்றும் அவன் நானேயென்றும்” வருந்தொடர்கள் பேதவாதிகள் கூற்றாய், இறைவன் வேறு, உயிர் வேறு என்னும் இருபொருட் கொள்கையினையும், “அது நீயேயாகின்ருய்” என்றும் "அது ஆனேன்” என்றும் வருந்தொடர்கள் அபேதவாதிகள் கூற்றாய்ப் பிரமப்பொருளே ஆன்மா என்னும் ஒருபொருட் கொள்கையினையும் உணர்த்தின என்றல் பொருந்தும். இங்ஙனம்பொருள் கூறுங்கால் “அவன் நானே” என்புழி அவனே நானே என எண்னேகாரம் வருவித்துரைத்தல் வேண்டும்.

இனி, இரண்டாக ஒன்றாக என்பதனை எதிர் நிரனிறையாக் கொண்டு “அதுஇது” “அவன் நானே” என்ற தொடர்கள் “பிரமமாகிய அதுவே இவ்வான்மா” “அவ்விறைவனே நான்” எனப் பிரமமே ஆன்மாவெனும் ஒரு பொருட் கொள்கையினையும், "அது நீயேயாகின்றாய் அது ஆனேன்” என ஆக்கச் சொற்புணர்த்துக் கூறப்படும் தொடர்கள், பிரமமும் ஆன்மாவும் இருவேறு பொருள்கள் என்னும் இருபொருட் கொள்கையினையும் உணர்த்தி நின்றன எனப் பொருளுரைத்தற்கும் இடமுண்டு.

இரண்டாகவும், ஒன்றாகவும் சொல்லுவரோ என உம்மை விரித்துரைக்க, சொல்லுவரோ என்புழி ஒகாரம் “சொல்ல மாட்டார்கள்’’ என எதிர்மறைப் பொருள் தந்து நின்றது. எனவே “ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றுமிரண்டும் இன்றாகாமல்” (இருபா இருபஃது-20) சிவமும் ஆன்மாவும் பொருட்டன்மையால் வேறாகவும் கலப்பினால் ஒன்றாகவும் உயிர்க்குயிராதற் றன்மையால் உடனாகவும் அத்துவிதமாய் நிற்கும் எனத், தமையுணர்ந்தோர் உரைப்பார்கள் என்பதாம். “தமையுணர்ந்தோர்” என்றது, எல்லாம் வல்ல முதல்வனுக்குத் தாம் என்றும் அடிமையே என்னுந் தம்மியல்பினை உள்ளவாறு உணரப் பெற்ற சிவஞானிகள் என்பதாம்.

இத்திருக்களிற்றுப்படியார், “அதுவிது என்றறிந்து உந்தீபற’’ என்னுந் திருவுந்தியார் தொடரின் பொருளை விரித்துரைக்கும் நிலையில் அமைந்ததாகும். “அதுவென்றும் இதுவென்றும் தற்போதத்தாற் சுட்டியறிதலன்றி அனைத்தையும் இருந்தாங்கே யறியவல்ல பேரறிவுப் பொருளாகிய அத்தகைய சிவபரம்பொருளே இவ்வான்மாவுடன் அத்துவிதமாய்க் கலந்து ஒன்றாய் விளங்குகின்றது என்னும் உண்மையினையறிந்து உய்தி பெறுவாயாக” என்பது இத்தொடரின்