பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


பொருளாகும். “அதுவிது என்னாது அனைத்து அறிவாகும் அது" எனப் பிரமமாகிய அதற்கு அடைமொழி புணர்த்துக் கூறி, “இது” என அடைமொழியின்றிச் சுட்டினமையால் “இது” எனச் சுட்டப்படும் ஆன்மா, அது இது என்று சுட்டியறியுந் தன்மையதாகிய சிற்றறிவினதென்பது தானே பெறப்படும். எனவே பேரறிவுப் பொருளாகிய சிவமும் சிற்றறிவுடைய உயிர்த் தொகுதியும் பொருட்டன்மையால் வேறுபட்ட இருவகைப் பொருள்கள் என்பதும், அனைத்து அறிவாகும் அது என்றமையால் அப்பேரறிவுப் பொருளாகிய சிவமே உலகுயிர்த் தொகுதிகளனைத்தையும் தனது விரிவுக்குள் அடக்கிக் கொண்டு அத்துவிதமாய்த் திகழவல்ல தனிமுதற்பொருள் என்பதும் உணர்த்தியவாறு.

அ௬. ஈறாகி யங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றிவற்றின்- வேறாய்
உடனாயிருக்கும் உருவுடைமை யென்று
கடனா யிருக்கின்றான் காண்.

இஃது “அனைத்தறிவாகும் அது இது” என்னுந் திருவுந்தியாரின் விளக்கமாய், இறைவன் உலகுயிர்த் தொகுதியாகிய அவையேயாய்த் தானேயாய் அவையேதானேயாய் முத்திறப்பட்டு விளங்கும் அத்துவிதத் தொடர்பினை வகைபெற விரித்துரைக்கின்றது.

(இ-ள்) உலகெலாம் ஒடுங்கிய காலமாகிய அவ்விடத்து முழு முதற் பொருளாகிய சிவம் ஒன்றுமேயாகியும், மீண்டும் படைப்புக் காலமாகிய இவ்விடத்துச் சத்தியும் சிவமும் என இரண்டாகியும், எல்லாவற்றையும் சத்தியிடமாய் நின்று மாறுபடாத ஐம்பெரும் பூதம் ஞாயிறு திங்கள் ஆன்மா என்னும் எண்பேருருவினனாகியும், இங்குச் சொல்லப்பட்ட உலகுயிர்த் தொகுதியுடன் பிரிவறக் கூடியிருக்கும் நிலையிலும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றின் வேறாகியும், உயிர்க்குயிராய் உள் நின்று அறிவித்தும் அறிந்தும் உதவுதலால் உயிர்களோடு உடனாகியும்-இவ்வாறு ஒன்றாய் வேறாய் உடனுமாயிருக்கும் தன் உண்மையினை எக்காலத்தும் தனக்குரிய முறைமையாகக் கொண்டிருக்கின்றான் அம்முதல்வன் என்னும் அவனது இயல்பினை (மாணவனே) கண்டுணர்வாயாக எ-று.

இதன்கண் “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றது, பேதநிலையினையும். “மாறாத எண் வகையாய்” என்றது, அபேத நிலையினையும், “மற்றிவற்றின் வேறாய்” என்றது, பேதா பேத நிலையினையும், “உடனாயிருக்கும் உருவுடைமை என்றும் கடனாயிருக்கின்றான்காண்” என்றது,